பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/533

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

————————————————————————

முதல் தொகுதி / இரவல் ஹீரோ 531

அதிர்ஷ்டம் அவனைத் தேடிக்கொண்டு வருகிறபோது நடந்து வரவில்லை. காரில் வந்தது. கார் என்றால் அப்படி இப்படியா? கப்பலைப் போல் பெரிய கார் அது. அதில் வந்துதான் அந்த சினிமா டைரக்டர் அவனைப் பிடித்தார்.

சென்டிரல் ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் எங்கோ அண்டர் கிரவுண்டுச் சிக்கலைச் சரி செய்துவிட்டுச் சாக்கடை தோண்டுகிற நீண்ட இரும்புத் துடுப்புக் கரண்டியும் தள்ளுவண்டியுமாக அவன் தன்னுடைய அழுக்குத் தேடும் யாத்திரையை நடத்திக்கொண்டிருந்தபோது அதிர்ஷ்டம் அவனைத் தேடிக்கொண்டு காரில் வந்து சேர்ந்தது. சூட்டும் பூட்டுமாகக் காரில் இருந்து இறங்கிய நாலைந்து வாட்ட சாட்டமான ஆட்கள் அவனை மடக்கிக் கொண்டனர்.

“ஒம் பேரென்ன?”

“சன்னாசிங்கோ.”

“நீ தானே இந்த வார்டுலே அண்டர் கிரவுண்டு சாக்கடையெல்லாம் அள்ளுறே?”

“ஆமாங்கோ!”

“உன்னாலே ஒரு காரியம் ஆகணும். அது உனக்கும் பெருமையைத் தரப் போகிற காரியம்தான்.”

“நா என்ன செய்யனும் ஸாமீ?”

“இப்ப நான் சொல்றதைக் கவனமாகக் கேளு. நாங்கள்ளாம் சினிமாப் படம் புடிக்கிறவங்க. இப்ப நாங்க எடுத்திட்டிருக்கிற படத்திலே யதார்த்தமான வாழ்க்கையைச் சித்திரிக்கிறதாகச் சில காட்சிகள் இருக்கு. கதாநாயகியோட கைவளையல் அண்டர்கிரவுண்டு சாக்கடைக்குள்ளே தவறி விழுந்திடறதாகவும் ஹீரோ அவளுக்காக அதுக்குள்ளார இறங்கி அதைத் தேடறதாகவும் ஒரு காட்சி இருக்கு. படத்திலே ஹீரோவா நடிக்கிற நடிகர் மணி நாவுக்கரசுக்குப் பதிலாக ‘டம்மி’ ஆளு ஒருத்தர் சாக்கடையிலே இறங்கறதாகத் தொலைவுக் காட்சியிலே படம் பிடிச்சிருக்கலாம். காட்சி இயற்கையாத் தத்ரூபமா அமையனும்னாத் தெருச் சாக்கடையிலேயே படம் பிடிக்கணும். ஆனால் நடிகர் மணியைப் போல உள்ளவங்களை அப்படியெல்லாம் கண்ட இடத்துக்கு அழைச்சிட்டு வந்து படம் பிடிக்க முடியாது. கூட்டம் கூடிடும்னு பயப்படுவார்.அவரோட ஸ்டேட்டசுக்கு அது நல்லாவும் இருக்காது. ஹீரோயினோட சீனைப் பத்திக் கவலை இல்லே. ஹீரோ சர்க்கடையிலே எறங்கறப்போ ஹீரோயின் நாலு அஞ்சடி தள்ளி நிற்கிறாப் போலப் படத்தைப் பிடிச்சிடலாம். அப்படி நிற்கிறதுக்கும் ஹீரோயினா நடிக்கிறவங்க சம்மதிச்சாச்சு. அவங்க புது நடிகை சொன்னபடி ஒப்புத்துக்கிட்டாங்க. உனக்கு உயரம் முகத்தோற்றம் எல்லாம் ஏறக் குறைய நடிகர் மணியைப் போலவே இருக்கு தலையை மட்டும் இன்னும் நல்லாக் கிராப் வெட்டி மேக்-அப் செய்துட்டாப் போதும். இதுக்கு நீ சம்மதிக்கனும் நாலைக் காலையிலே ஷஅட்டிங் வைச்சுக்கலாம். ஒரு நிமிஷம் நீ காமிராவிலே தெரிஞ்சாப் போதும், மற்றதை எல்லாம் நாங்க கவனிச்சுக்குவோம்...”