பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/535

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

—————————————————————

முதல் தொகுதி / இரவல் ஹீரோ 533

அந்தக் கேள்வி எரிச்சலைத் தான் மூட்டியது. ஆனாலும் காரியம் நடக்க வேண்டும் என்பதில் கண்ணாக இருந்த அவர் பொறுமையைக் கடைப்பிடித்தார். தரையில் சாக்கடையருகே நிற்கக் கூசிக் கொண்டே நிற்பதுபோல் செருப்பணிந்த கால்களோடு அருவருப்புடனே ஒதுங்கி ஒதுங்கி நின்றாள் ஹீரோயின்.

ஆனால் ஹீரோவோ தினம் தொழிலுக்காகத் தான் மூழ்குகிற வழக்கமான சாக்கடையை அன்றைக்குப் பன்னிர்க் குளமாக நினைத்துக் கொண்டு மிகுந்த உற்சாகத்தோடு மூழ்கி எழுந்தான்.

கண் மூடிக் கண் திறக்கிற நேரத்தில் அந்தப் படப் பிடிப்பு முடிந்து விட்டது. ஹீரோ சன்னாசி தோட்டி சன்னாசியாக மாறி விட்டான்.அந்த ஒரு கணத்துக் கனவும் மெல்லக் கலைந்து போயிற்று.வந்திருந்தவர்கள் எல்லாரும் ஸ்டூடியோவேனில் பறந்து கொண்டு போய்விட்டார்கள். சன்னாசி சாக்கடை நீரில் மூழ்கி யெழுந்த கோலத்தில் தெருவில் தனியாக நின்று கொண்டிருந்தான். புது நடிகையை வேடிக்கை பார்க்கக் கூடியிருந்த கூட்டமும் அவள் போனதும் கலைந்து விட்டது.

ஏதோ நினைவு வந்தவனாகச் சன்னாசி சென்டிரல் ஸ்டேஷன் கடிகாரத்தைப் பார்த்தான். மணி எட்டரைக்கு மேல் ஆகியிருந்தது. ஏழரை மணிக்கு இசக்கிமுத்து மேஸ்திரியிடம் ஆஜர் கொடுக்க வேண்டும்.

‘இன்றைக்குக் கொஞ்சம் லேட்டாகத்தான் ஆஜர் கொடுப்போமே! இந்த இசக்கிமுத்து மேஸ்திரி என்ன பெரிய ஹீரோவோ?’ என்று துணிச்சலாக நினைத்துக் கொண்டே போகிற போக்கில் டைரக்டர் அவன் பக்கமாக வீசி எறிந்துவிட்டுப் போயிருந்த உயர்தர சிகரெட் பெட்டியில் ஒன்றை உருவிப் புகைக்கத் தொடங்கினான். அந்தச் சுகத்தில் நேரம் போனதே தெரியவில்லை. அன்று வேலைக்கு மட்டம் போட்டாயிற்று. அந்தச் சினிமா டைரக்டரைப் போலச் சூட்டும், பூட்டும் போட்டுக் கொள்ள வேண்டும் என்று சன்னாசிக்கு ஆசையாயிருந்தது. கிடைத்திருந்த பணத்தில் எழுபது எண்பது ரூபாய் வரை செலவழித்து அப்படி இரண்டு ஜோடி உடுப்பு ரெடிமேடாக வாங்கிச் சேரியில் கொண்டுபோய்க் குடிசையின் பெட்டியில் இரகசியமாக வைத்துப் பூட்டினான். டாக்ஸியில் ஏறிச் சுற்ற வேண்டும் என்றும் அவனுக்கு ஓர் ஆசை வெகு நாட்களாக உண்டு. இரவில் அந்த ‘டைரக்டர் உடுப்பை’ அணிந்துகொண்டு டாக்ஸியிலே ஏறிப்போய் மாடியில் பெரிய கிளாஸ் டிக்கெட் வாங்கி இரண்டாம் ஆட்டம் சினிமாவும் பார்த்தான் சன்னாசி, அதற்குமுன் புகாரியில் போய் வயிறு புடைக்கச் சாப்பிட்டிருந்ததில் ஆன செலவும் அதிகம் தான். இரண்டு மூன்று நாட்கள் இப்படி ஒரே ஹீரோ மிதப்பில் எல்லாம் பரம சுகமாகக் கழிந்தது.

கையிலிருந்த பணமும், மனத்திலிருந்த ஹீரோ கனமும் கரைய இந்த மூன்று நாள் வேண்டியிருந்தது சன்னாசிக்கு. நான்காம் நாள் எட்டு மணிக்கு எழுந்து முதல் நாள் ஞாபகமாகப் பாதியில் அணைத்து வைத்திருந்த சிகரெட்டைப் புதைத்துக்கொண்டே ‘எதற்காக இந்தப் பொழுது விடிந்தது?’ என்ற அலட்சியத்தோடு இசக்கிமுத்து மேஸ்திரியிடம் ஆஜர் கொடுக்கப் போனான் சன்னாசி.