பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/536

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

534நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————


“ஏண்டாலே! உனக்கென்ன சினிமா ஷ்டாரின்னு நினைப்பாங்கறேன்? தோட்டிப் பயலா லட்சணமா..?” என்று வழக்கம் போல் மேஸ்திரி ஆரம்பித்தபோது எல்லா நாளும் போல இன்று அவனால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

“சர்த்தான் நிறுத்து சார்... நான் சினிமா ஷ்டாரில்லாட்டா நீயா ஷ்டாரு?” என்று பதிலுக்குப் பேசிவிட்டான் சன்னாசி. இசக்கிமுத்து மேஸ்திரி அந்த ஹீரோவுக்கு வில்லனானார். ஹீரோவின் கை வீழ்ந்துவிட்டது.

‘ஸீரியஸ் மிஸ் காண்டக்ட்’ என்று ஒரே வரி ரிப்போர்ட் எழுதிக்கொண்டு அவனை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார் இசக்கிமுத்து மேஸ்திரி. சன்னாசிக்கு வேலை போய்விட்டது. வேலை போனால் என்ன? இதென்ன பெரிய வேலை..?

சேரிக்குத் திரும்பி வந்து அவன் குப்பச்சிக் கிழவியிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

“ஆயா! இவனுக என்னமோன்னு நினைச்சுகிட்டிருக்காங்க... கொஞ்ச நாழின்னாலும் ஹீரோ ஹீரோதான்... அந்தப் பயாஸ்கோப்பு ரிலீஸாகி வரப்போவுது பாரு. அதுலே காத்தவராயன் மகன் சன்னாசின்னு எம் பேரு காமிப்பாங்க. அப்ப தெரியும் எம் பெருமை...”

“நீராசாவாப் பொறந்திருக்கணும்டா என் தங்கமே” என்று குப்பச்சிக் கிழவி அந்த ஹீரோவைத் தன் வழக்கமான வார்த்தைகளில் வாழ்த்தினாள். இன்னும் அரைமணி நேரம் வரை அந்த ஹீரோவுக்கு ஒரு கவலையும் இல்லை. ஏனென்றால் காதில் அரைக் கட்டை பீடித் துண்டு ஒன்று ‘ஸ்டாக்’ இருந்தது.

‘கொஞ்ச நாழின்னாலும் ஹீரோ ஹீரோதானே?’ இல்லையா, பின்னே?

(கல்கி, 1.4.1962)