பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/539

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

——————————————————————முதல் தொகுதி / ஊமைப் பேச்சு * 537


மேற்கண்ட குழப்பமான வாக்கியங்களில் சுந்தரராஜனுடைய மனநிலையை நான் தெளிவாகச் சொல்லிவிட்டேன் என்று நம்புகிறேன். தெளிவாகச் சொல்லப் பட்டிராவிட்டால் அதற்கும் நான் பொறுப்பாளி இல்லை. ஏனென்றால் அது சுந்தரராஜனுடைய மனத்தைப் பொறுத்த விஷயம். அதற்கு நான் எப்படிப் பொறுப்பாளியாக முடியும்?

தண்டபாணியின் மகள் நீராடி நீலச் சேலையுடுத்தி மலர் கொய்ய வரும் மற்றோர் மலராக அலர்ந்த நிலையில் நாலைந்து முறை அவளைப் பார்த்தபின் அரைகுறையாய் மலர்ந்த பூவைப்போல் சுந்தரராஜனுக்குள் கவிதை மலர்ந்தது. முற்றிலும் மலராமல் ஏதோ ஒரு இதழ் அடி முடியின்றி அந்தரமாக மலர்ந்தது. இப்படி அரைகுறையாய் மலர்கிற மலர்ச்சிக்கு என்றுமே மணம் அதிகம்.

“பெண்ணென்று பேர் சொல்லி
முகிலினிடை மின்னொன்று வந்ததென...”........

இதற்குமேல் கவிதை வரவில்லை.ஆனால் வருவதற்கு மீதமிருந்தது என்பதென்னவோ நிச்சயம். சுந்தரராஜனுடைய இளமையும், அதைவிடவும் இளமையான அவன் நினைப்புகளும், அவனுடைய கண்களில் பார்வையில் தென்பட்டவை எவையோ, அவற்றை அவன் இளமை மயமாகக் கண்டதுவும், சேர்த்துதான் கவிதைகளாகப் பிறந்து கொண்டிருந்தன என்று சொல்ல வேண்டும். கவிதை என்கிற வார்த்தை மட்டுமன்று; அந்த வார்த்தைக்குப் பொருள் பிறக்கக் காரணமான அனுபவமுமே இளமை மயமானதுதான். அனுபவத்தில் இளமையும் உற்சாகமும் சிறிதுகூட இல்லாமல் கவிதையில் அவை வரவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் பயனில்லை. சுந்தரராஜனுக்கு அனுபவத்தில் இளமை, உற்சாகம் எல்லாம் இருந்தன. ஆனால் தைரியம் மட்டும் இல்லை. தைரியமில்லாதவர்கள் உலகத்தில் வாழக்கூடாதென்று யாரும் சட்டம் இயற்றி வைக்கவில்லை. அதே சமயத்தில் தைரியமில்லாதவர்கள் காதலிக்கக்கூட தகுதி இல்லை என்று பல பேருடைய அனுபவம் சொல்கிறது. இந்த உலகத்தில் ஒருவிதமான சாதனைக்கும் தைரியமில்லாதவர்கள் காதலையாவது சாதிக்கலாம் என்று இன்றைய இளைஞர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாவம்! காதலைச் சாதித்துக் கொள்வதற்குத்தான் நடைமுறையில் அதிகமாக தைரியம் வேண்டுமென்பதை அனுபவரீதியாகப் புரிந்து கொள்ளுகிற வரை அவர்கள் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கப்போகிறார்கள்.அப்படி வெகுளித்தனமாக நினைத்துக் கொண்டிருக்கிற பல்லாயிரம் அப்பாவிகளில் சுந்தரராஜனும் ஒருவன் என்று அவனை அலட்சியாக விட்டு விடுவதற்கில்லை. அவன் இதில் அடங்காத தனி ரகத்தைச் சேர்ந்தவன். அவன் கவியாயிருந்தான், தைரியசாலியாயில்லை. பலரைக் கவர்கிற ஒரு குணமும், எவரையுமே கவரமுடியாத ஒரு பலவீனமும் சேர்ந்து வாழ்கிறவனைப் பாராட்டாமலும் இருக்கமுடியாது; தூற்றாமலும் இருக்க முடியாது. சுந்தரராஜனைப் பாராட்டுவதற்கோ, தூற்றுவதற்கோ ஜஸ்டிஸ் தண்டபாணியின் மகளுக்குத் தைரியமில்லையானாலும் அவன் அவுட்ஹவுஸிலிருந்து படியிறங்கும் போது தன்னைப் பார்க்கிறான் - பார்க்க வேண்டும் - அப்படி அவன்