பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/540

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

538 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

————————————————————————————

பார்ப்பதனால்தான் பெருமைப்படுவதற்கு ஏதோ இருக்கிறது - என்பதை ஜஸ்டிஸ் தண்டபாணியின் மகள் விரும்பினாள். அவற்றுக்காக இரகசியமாய்ப் பெருமைப்பட்டுக் கொள்ளவும் செய்தாள். ஒரு பெண் மனம் நெகிழ்கிறாள் என்பதை அறிவிக்க இதைவிட அதிகமான அடையாளங்கள் எவையும் தேவையில்லை. சுந்தரராஜன் ஜஸ்டிஸ் தண்டபாணியின் அந்தரங்கக் காரியதரிசியாக வேலை ஏற்றுக் கொண்டு அந்தப் பங்களாவின் அவுட்ஹவுசில் குடியேறிய பதினைந்தாவது நாளோ, பதினாறாவது நாளோ, அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது.

வழக்கம்போல் அவன் அவுட்ஹவுஸ் மாடியிலிருந்து படியிறங்கிக் கீழே வந்தபோது பூக்குடலையுடன் தோட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருந்த தண்டபாணியின் மகள் விறுவிறுவென்று நடந்து வந்து ஒரு கொத்துப் பிச்சிப் பூக்களையும் அவற்றினிடையே நாலாக மடிக்கப்பட்ட ஒரு கடிதத்தையும் அவன் கையில் திணித்துவிட்டு நடந்தாள். மகிழ்ச்சிகரமான இந்த அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு, அவள் எவற்றைத் தன்னிடம் தந்தாள்; அப்படித் தந்தவற்றைத் தான் என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் உணர்ந்து சமாளித்துக் கொள்ள சுந்தரராஜனுக்குச் சிறிது நேரமாயிற்று.

ஈரமும் அதிகாலையின் புதுமையும் கூடி மயக்கும் நறுமணத்தோடு கூடிய பிச்சிப்பூக்களையும், அவற்றைக் காட்டிலும் அதிகமாக மணந்து மயக்கும் அந்தக் கடிதத்தையும் சுமந்து கொண்டு சுந்தரராஜன் திரும்பி மாடிப்படி ஏறியபோது மிகவும் வேகமாக ஏறினான். வேகம் என்றால் அந்தப் பதத்துக்கு இங்கே ஆவல் என்று அர்த்தம் அந்தக் கடிதத்தில் அவனைக் கொன்றிருந்தாள் அவள்.

“நானும்தான் பதினைந்து நாட்களாகப் பார்த்துக் கொண்டு வருகிறேன், உங்களுக்குப் பேசத் தெரியுமா? அல்லது நீங்கள் ஓர் ஊமையா?”

இந்த இரண்டே இரண்டு வாக்கியங்கள்தான் அந்தக் கடிதத்தில் இருந்தன. இவற்றைப் படித்ததும் அவனுக்கு ரோஷமாயிருந்தது, சந்தோஷமாகவும் இருந்தது. தன்னுடைய சுபாவமான கூச்சத்தையும், பயத்தையும், கேலி செய்வதுபோல் இப்படி எழுதிவிட்டாளே என்ற ரோஷம் ஒரு புறம் துணிந்து தனக்கு எழுதினாளே என்ற மகிழ்ச்சி ஒருபுறம். இந்த இரண்டு உணர்ச்சிகளுக்கு அப்பால் மொத்தமாக அவன் மனத்தில் நிறைத்திருந்தது என்னவோ பயம்தான். ஜஸ்டிஸ் தண்டபாணி அவர்களின் முன்கோபத்தைப்பற்றி அவன் நிறையக் கேள்விப்பட்டிருந்தான். இரண்டு காரணங்களுக்காக அவன் அவரை நினைத்துப் பயப்பட வேண்டியிருந்தது. முதல் காரணம் அவர் தன்னுடைய எஜமானராகவும் ஜஸ்டிஸ் ஆகவும் முன்கோபக்காரராகவும் இருக்கிறாரே என்பது. இரண்டாவது காரணம் தன்னால் காதலிக்கப்படுகிற பெண் அன்னாருடைய மகளாயிருக்கிறாளே என்பது. தங்கள் மகள் எந்த ஆண்பிள்ளையைக் காதலிக்கிறாளோ அந்த ஆண் பிள்ளையைத் தாங்கள் கட்டாயம் கோபித்துக்கொண்டு விரட்டியடிக்க வேண்டுமென்பது தந்தையர்களின் பொதுநோக்கமாயிருப்பதைப் பல காதல் கதைகளிலும், திரைப்படங்களிலும்