பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/541

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

——————————————————————————————முதல் தொகுதி / ஊமைப் பேச்சு * 539

பார்த்துப் பார்த்துப் புரிந்து கொண்டிருந்தான் சுந்தரராஜன். அது அவனைப் பயமுறுத்துவதாக இருந்தது.

அவள் அந்தக் கடிதத்தை அவனிடம் கொடுத்த விநாடியிலிருந்து அவனுக்கு நிம்மதி பறிபோய்விட்டது. பயமும், பதற்றமும் விநாடிக்கு விநாடி அவனைத் தவிக்கச் செய்தன. ஜஸ்டிஸ் தண்டபாணி தன்னை நிமிர்ந்து பார்க்கும் ஒவ்வொரு வேளையும், ‘என்னடா பயலே! என் மகள் கைகளிலிருந்து காதல் கடிதமா வாங்குகிறாய்? இரு! இரு! உன்னைக் கவனிக்கிற விதமாகக் கவனித்துக் கொள்கிறேன்’ என்று கடுங்கோபத்துடன் கர்ஜனை செய்து குமுறப் போவதுபோல் தனக்குத்தானே பயங்கரமாகக் கற்பனை செய்துகொண்டே அவர் முகத்தைப் பயத்தோடு பார்ப்பான் சுந்தரராஜன். இரண்டு விநாடி நடுநடுங்கிக் கொண்டே அவர் முகத்தைப் பார்த்த பின்பு தான் நினைத்துப் பயந்ததுபோல் ஒன்றுமில்லை என்பது உறுதியாகத் தெரிந்த பிற்பாடு நிம்மதியாக மூச்சு வரும் அவனுக்கு.

இப்படிப் பதற்றத்திலேயே ஒரு வாரத்துக்கும் மேலாக வீணே கழிந்துவிட்டது. இதற்கு நடுவில் அந்தப் பெண்ணரசி இன்னொரு கடிதத்தையும் அவன் கையில் சேர்த்துவிட்டாள். அதிலும் அவள் அவனைச் சாடியிருந்தாள்.

‘சந்தேகமில்லாமல் நீங்கள் ஓர் ஊமைதான்! ஊமை மட்டுமில்லை. குருடாகவும் இருப்பீர்கள் போலிருக்கிறது. செவிடோ என்றுகூட எனக்குச் சந்தேகமாயிருக்கிறது. என்னுடைய முதல் கடிதத்துக்கு ஒருவாரமாகப் பதில் இல்லை. அதனால் நீங்கள் ஓர் ஊமை. நான் அவுட்ஹவுஸின் மாடிப்படிக்கு நேர் கீழே தோட்டத்தில் பூப்பறிக்க வரும்போது நீங்கள் படியிறங்கி வந்தாலும் என்னை ஏறிட்டு நிமிர்ந்து பார்க்கக் கூசுகிறீர்கள். அதனால் நீங்கள் ஒரு குருடர், பூப்பறிக்கும்போது என் கைகளின் வளையல்கள் கலீர் கலீரென ஒலித்தும் உங்கள் செவிகள் அவற்றைக் கேட்கத் தவிப்பதாகத் தோன்றவில்லை. அதனால் நீங்கள் ஒரு செவிடராகவும் இருக்கலாம். உங்களை என்ன சொல்லுவதென்று எனக்குத் தெரியவில்லை!’

இந்தக் கடிதம் கைக்குக் கிடைத்தபோது நிச்சயமாக உடனே அவளுக்கு ஒரு பதில் எழுதிவிட வேண்டும் என்று தன் மனத்தைத் திடப்படுத்தியிருந்தான் சுந்தரராஜன். ஆனால் நேரமாக நேரமாக-நேரமாகத் தைரியத்தையும் மீறிக் கொண்டு பயம் பெருகி அவளுக்குப் பதில் எழுதும் எண்ணத்தை அடியோடு அமுக்கிவிட்டது. ‘கோழைகள் காதலிக்கக்கூடத் தகுதியற்றவர்கள்’ ‘பிளாட்டினம்’ மொழியை (பொன்மொழியை விடத் தரத்தில் உயர்ந்தது) நாளுக்கு நாள் நிரூபித்துக் கொண்டிருந்தான் சுந்தரராஜன். கோழைகள் துணிந்து செய்கிற காரியத்திலும் முடிவாக விளைகிற விளைவு அவர்களுடைய கோழைத்தனத்தை நிரூபிப்பதாகவே வந்து சேரும். சுந்தரராஜனும் இதற்கு விதிவிலக்கு இல்லைதானே? சுந்தரராஜன் இப்படியே நாளொரு பயமும் பொழுதொரு நடுக்கமுமாகத் தயங்கித் தயங்கிக் கடைசியில் துணிந்து அவளுக்கு ஒரு கடிதம் எழுதினான். அந்தக் கடிதத்தில் அவளைப் பார்த்ததும் தான் இயற்றிய நளினமான காதல் கவிதையையும் எழுதியிருந்தான். எல்லாவற்றையும் அற்புதமாகவும்,