பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/542

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

540 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

————————————————————————————

அழகாகவும், எழுதிவிட்டுக் கடைசியாக மிகமிகப் பைத்தியக்காரத்தனமான ஒரு வாக்கியத்தையும் சேர்த்து எழுதி வைத்தான்.

“எனக்கு என்னவோ ரொம்பவும் பயமாயிருக்கிறது. இந்தக் கடிதத்தைப் படித்தவுடன் ஞாபகமாகக் கிழித்து எறிந்துவிடு கைத்தவறுதலாக எங்கேயாவது யார் கண்களிலேனும் தென்படும்படி வைத்துவிடாதே.”

அடுத்த நாள் காலையில் அவள் பூப்பறிக்க வரும்போது தைரியமாகக் கொண்டு போய் அதை அவளிடம் கொடுத்துவிடவேண்டுமென்று தீர்மானமும் செய்த பின்னர் முதல்நாள் இரவு படுத்துக் கொள்வதற்கு முன் அறைக் கதவுகளைப் பத்திரமாகத் தாழிட்டுக் கொண்டு இந்தக் கடிதத்தை எழுதியிருந்தான் சுந்தரராஜன். ஆனால் அவனுடைய தைரியம் என்னவோ அறைக்கதவைத் தாழிட்டுக் கொண்டிருந்த வரைதான் இருந்தது. மறுநாள் காலை விடிந்ததுமே முதல்நாள் செய்த தீர்மானத்தையும் எழுதிய கடிதத்தையும் எண்ணி உடம்பு நடுங்கியது. மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு நடுங்கும் கால்களால் ஒவ்வொரு படியாக இறங்கிச் சென்று குனிந்த தலை நிமிராமல் அந்தக் கடிதத்தை அவள் கைகளில் போட்டுவிட்டு ஏதோ கொலைக் குற்றம் செய்தவன் ஓடி வருவதுபோல் திரும்பிப் படியேறி அறைக்குள் போய்க் கதவை உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டு விட்டான்.

அத்தனை பயத்திலும் அவன் மனம் மெல்லிய கற்பனைகளில் ஈடுபடத் தவறவில்லை. தன் கடிதத்தையும் அதில் தான் அவளைப் பற்றிய எழுதியிருக்கிற கவிதையையும் படித்துவிட்டு அவள் எத்தனை பூரிப்பு அடைவாள் என்று கற்பனை செய்து மகிழத் தொடங்கியிருந்தது.

“பெண்ணென்று பேர் சொல்லி முகிலினிடை
மின்னொன்று வந்ததுபோல்”

அடடா! எத்தனை அழகாகப் பாடியிருக்கிறேன்? இதைப் படித்தவுடன் அவனுடைய மனத்தில் என்னென்ன உணர்ச்சிகள் எழும்? என்னைப் பற்றி எவ்வளவு பெருமையாக நினைப்பாள்? என்றெல்லாம் சுகமான நினைப்புக்கள் சுந்தரராஜனுடைய மனத்தில் சுழன்று கொண்டிருந்தன.

அரைமணி நேரங்கழித்து அவனுடைய அறைக்கதவு தடதடவென்று இடிக்கப்பட்டது. பயந்து நடுங்கிக் கொண்டேகதவை திறந்தான் சுந்தரராஜன். அந்தப் பெண் முதல்தடவையாக தைரியமாக மாடிப்படி ஏறி வந்து அவன் அறை வாயிலில் நின்றாள். அந்த அதிர்ச்சியை உடனடியாகச் சமாளிக்கத் தெரியாமல் ஹி..ஹி.. என்று அசட்டுச் சிரிப்புடன் எதை எதையோ பேச நினைத்தும் ஒன்றும் பேச வராமல் மென்று விழுங்கினான் சுந்தரராஜன். அவள் அவன் முகத்தை நன்றாகவும் அலட்சியமாகவும் நிமிர்ந்து பார்த்தாள்.அந்தப் பார்வை நிர்ப்பயமாகவும் துணிச்சலாகவும் இருந்தது.

“மிஸ்டர் உங்களுக்கு அநேக நமஸ்காரம். கோழைகள்கூடக் கவிதை எழுதலாம். ஆனால் காதல் செய்வதற்குத் தைரியசாலியால்தான் முடியும் தைரியமே ஒரு பெரிய கவிதை. அது உங்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. தைரியமில்லாத