பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/543

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————————————————முதல் தொகுதி / ஊமைப் பேச்சு * 541

ஆண்பிள்ளையை அவன் கவிதை எழுதுகிறான் என்பதற்காக மட்டும் காதலிப்பதற்கில்லை. நான் உங்களுக்கு இரண்டு கடிதம் எழுதினேன். பயந்து நடுங்கிக் கொண்டே அதைப்படித்தவுடன் கிழித்து எறிந்துவிடும்படி எந்தக் கடிதத்திலும் நான் எழுதவில்லை. நீங்களோ ரொம்ப நாளைக்குப் பிறகு பயந்து கொண்டே ஒரு கடிதம் எழுதிவிட்டுக் கடைசியில் அப்படி எழுதியது ஒரு கொலைக் குற்றம் போலப் பாவித்துக் கிழித்துவிடும்படி சொல்லுகிறீர்கள். உங்களுக்கு யார்மேல் பிரியமாயிருக்கிறதோ அவளை நிமிர்ந்து பார்க்கவே கூசுகிறீர்கள். நீங்கள் கவியெழுதுவதனால் உங்களை ஆண்பிள்ளை என்று நான் ஒப்புக்கொள்ள முடியாது. உங்களுடைய தைரியத்தையும் ஆண்மையையும் வைத்துத்தான் உங்களை ஆண்பிள்ளையாகக் கணிக்கமுடியும். உங்களுக்குத் தைரியமாயிருந்தால் என்னைப் பார்ப்பதற்கே பயப்படாதீர்கள். சிரிப்பதற்கு நடுங்காதீர்கள். நீங்கள் கவியாயிருக்க வேண்டாம்; ஆண்பிள்ளையாயிருங்கள்; தைரியசாலியாயிருங்கள். அப்படி இருக்க முடியாவிட்டால் எனக்குக் கடிதம் எழுதாதீர்கள்; என்னைப் பார்க்காதீர்கள்; பயந்து உதறாதீர்கள்.”

மனத்திலிருந்ததைக் குமுறக் குமுறப் பேசிவிட்டுச் சற்றுமுன் அவன் கொடுத்திருந்த கடிதத்தை அவனுடைய முகத்தைப் பார்த்துக் கசக்கி எறிந்தாள் அவள். அடுத்த நிமிஷம் வந்தது போலவே தைரியமாகப் படியிறங்கிப் போய்விட்டாள் ஜஸ்டிஸ் தண்டபாணியின் மகள்.

சுந்தரராஜன் ஊமையானான். அவனுடைய கவிதைத்தன்மையும் ஊமையாய்ப் போயிற்று. மனிதனாயிருந்து காதலிக்க முடியவில்லையே என்பதற்காக அவன் ரொம்பவும் வருந்தினான்.

(தாமரை, ஆகஸ்ட், 1962)