பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/544

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72. வெறும் புகழ்

சிரியர் குறிப்பு:”எழுத்தாளருக்குப்பணம் எதற்கு? புகழ் இருந்தால் போதாதா? அதைத்தான் நாம் வாங்கித் தருகிறோமே!” என்று சில புத்தகக் கம்பெனிக்காரர்கள் எண்ணுகிறார்கள்.

பேராசிரியர் கள்ளப்பிரான் பிள்ளை பொருளாதார எம்.ஏ. பட்டதாரியான படியாலும், ஏறக்குறையக் கால் நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாக அதைக் கல்லூரி வகுப்பறைகளில் கற்பித்துக் கற்பித்துத் தழும்பேறிப் போயிருந்ததாலும் ஏதோ ஒரு புத்தகக் கம்பெனிக்காரன் ‘நோட்ஸ்’ வெளியிடுவதற்காக அவரைத் தேடிக் கொண்டு வந்து சேர்ந்தான். இதை இப்படிச் சொல்வதை விட வலை போட்டுத் தேடிப் பிடித்து விட்டான் என்று சொல்வது நன்றாகவும் பொருத்தமாகவும் இருக்குமென்றாலும், பேராசிரியருடைய கெளரவத்துக்கும், கால் நூற்றாண்டுக் கால ஸர்வீஸஸுக்கும் இழுக்காகுமே என்று கருதி அப்படிச் சொல்லக் கூடாதுதான். வாசகர்கள் மன்னிக்க வேண்டும்.

பேராசிரியரிடம் இரண்டு விதமான சாமர்த்தியங்கள் நிரந்தரமாக உண்டு. ஒன்று பொருளாதாரம், மற்றொன்று அப்பாவித்தனம். பொருளாதாரத்துக்காக ஏதோ ஒரு சர்வ கலா சாலை அவருக்குக் கெளரவ டாக்டர் பட்டம் கொடுக்க முன் வரப் போவதாகக் கேள்வி. அப்பாவித் தனத்துக்காக டாக்டர் பட்டம் வழங்க உலகத்தில் எந்தச் சர்வ கலா சாலையும் தயாராக இருக்க முடியாதாகையினால், அந்தச் சாமர்த்தியத்துக்காக என்று எவரிடமிருந்தும் எந்தப் பாராட்டையும் திருவாளர் கள்ளப்பிரான் பிள்ளை எதிர்பார்க்கக் கூடாதுதான். அப்பாவியாக இருப்பது கூட ஒரு சாமர்த்தியமா? என்று நீங்கள் கேட்கலாம்.நிச்சயமாக அதுவும் ஒரு சாமர்த்தியந்தான். ஏனென்றால் எல்லோராலும் அப்பாவியாக இருக்க முடியாது என்பது உறுதியானது. மார்ச் - செப்டம்பர் பரீட்சைக்கு மாறி மாறிப் போகிற பி.ஏ. வகுப்பு மாணவர்களுக்குப் பொருளாதார நோட்ஸ் ஒன்று வெளியிட்டு கடைத் தேற்ற வேண்டுமென்று அந்தப் புத்தகக் கம்பெனிக்காரன் நினைத்ததற்குக் காரணம் பொருளாதார சாஸ்திரம் என்ற பண வித்தை - அல்லது காகிதத் தத்துவம் உலகத்தில் பரவ வேண்டும் என்பதற்காகவோ, திருவளார் கள்ளப்பிரான் பிள்ளையைப் பிராபல்யப்படுத்த வேண்டுமென்பதற்காகவோ அன்று,பொருளாதார சாஸ்திரத்தைப் படித்து விட்டுக் கள்ளப்பிரான் பிள்ளை அவர்களைப் போலப் பொருளாதாரப் பற்றாக்குறையால் மாதக் கடைசி வாரம் கஷ்டப்படுவதை விடப் பொருளாதார சாஸ்திரத்தை மலிந்த விலைக்கு அச்சுப் போட்டு விற்றுப் பயனடையலாம் என்றுதான்