பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/545

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————————————————முதல் தொகுதி / வெறும் புகழ் * 543

அந்தப் புத்தகக் கம்பெனிக்காரன் அவரிடம் வந்திருந்தான். பொருளாதாரத்தைக் கற்பதையும், கற்பிப்பதையும்விட அச்சிடுவதும் விற்பதும் லாபகரமான காரியம் என்பது அவனுக்குப் புரிந்தது. நாலைந்து பரீட்சையாகக் கள்ளப்பிரான் பிள்ளை கோடி காட்டுகிற பகுதியிலேயே கேள்விகள் வருவதாக நம்பியதனால் மாணவர்களிடையே அவருக்கும் தெரியாமலே அவர் மேல் ஒரு ‘ஸ்டார் வேல்யூ’ ஏற்பட்டுத் தொலைந்திருந்தது. கள்ளப்பிரான் பிள்ளைக்கே தெரியாத இந்த இரகசியத்தை அந்தப் புத்தகக் கம்பெனிக்காரன் எப்படியோ தெரிந்து கொண்டிருந்தான். ஆக மொத்தம் இத்தனை காரணங்களாலும் அவன் வீடு தேடி வந்து கள்ளப்பிரான் பிள்ளையைச் சந்தித்த விவரம் பின் வருமாறு-

ஆகஸ்டு மாதம் முதல் வாரம் ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று காலை பத்து மணி சுமாருக்கு ‘டிப்டாப்’பாகக் காரில் வந்து இறங்கிவிட்டு வாயிலில் ஒவ்வொரு படியாக ஊன்றி ஏறிய விதத்திலேயே ‘நான் ஒரு கெளரவமான வியாபாரி’ என்பதை நிரூபிக்க முயல்வது போல் நடந்து வந்து கள்ளப்பிரான் பிள்ளையை வணங்கினான் அந்தக் கம்பெனிக்காரன். அவன் காரிலிருந்து இறங்கிய விதமும், படியேறிய தினுசும், சரிகை அங்கவஸ்திரத்தைச் சுழற்றிக் கையிலெடுத்து, ‘இது சரிகை அங்கவஸ்திரந்தான்’ என்பதை எதிராளிக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறவனைப் போல் மறுபடி தோளில் போட்டுக் கொண்டு கைகூப்பிய பாணியும் எல்லாமாகச் சேர்ந்து கள்ளப்பிரான் பிள்ளையை அயர்ந்து போகச் செய்துவிட்டன. கள்ளப்பிரான் பிள்ளையும் அவனைப் பதிலுக்கு வணங்கினார்.

“பி.ஏ. எகனாமிக்ஸ் பாடத்துக்கு இதுவரை ஒரு நல்ல நோட்ஸ் யாருமே வெளியிடலை. பரீட்சைக்குப் போறவங்க ரொம்பச் சிரமப்படறாங்க. உங்களைப் போல தகுதியுள்ள பெரியவர்கள் மாணவருலகத்துக்கு ஏதாவது சேவை செய்யனும்” என்று அவன் பேச்சை ஆரம்பித்த விதமும் கெளரவமான முறையில்தான் இருந்தது; அதாவது திருவாளர் பிள்ளைக்குக் கொளரவமாக இருந்தது. உடனே பதில் சொல்ல முடியாதபடி திக்குமுக்காடிப் போகும் விஷயம் எதையாவது எதிராளியிடமிருந்து கேட்டுவிட்டால் கள்ளபிரான் மூக்குக் கண்ணாடியைக் கழற்றி மேஜை மேல் வைத்துவிட்டுக் காதோரமாகத் தலையைச் சொறிந்துவிட்டுச் சில விநாடிகள் இடைவெளி கொடுத்த பின்பே பதில் சொல்வது வழக்கம். அன்றும் அப்படியே நடந்தது.

“புத்தி என்பது தானே சுயமாக வளர வேனும், தூக்கமருந்து சாப்பிட்டுத் தூங்குகிற மாதிரி ‘நோட்ஸ்’ படித்தப் பரீட்சை பாஸ் பண்ணுவது கெடுதலான காரியமாயிற்றே!” என்று தம்மைத் தேடி வந்த காரணமே ஆட்டம் காணும்படி பதில் சொன்னார் கள்ளப்பிரான்பிள்ளை. வந்தவனும் விடவில்லை. இரண்டாவது தடவையாகச் சரிகை அங்கவஸ்திரத்தைச் சுழற்றித் தோளில் போட்டுக் கொண்டு இந்த மனிதரை எந்தக் கோடியில் எந்தப் பேச்சால் பலவீனப்படுத்தி விழச் செய்யலாம் என்று தேர்ந்த வியாபாரியின் சிறந்த புத்திசாலித்தனத்தோடு பேச்சைத் தீர்மானம் செய்ய முயன்றான். தீர்மானமும் செய்துவிட்டான். “உங்களைப் போன்றவர்களே இப்படிப்