பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/546

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

544 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

————————————————————————————

பற்றுதல் இல்லாமல் பேசிவிட்டால் அப்புறம் நாங்களெல்லாம் என்ன செய்வது? உங்களைப் போல் பொருளாதார சாஸ்திர வித்தகர்கள் இருப்பது தேசமே பெருமைப்படற விஷயம்.”

“ஐயையோ! அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லே. நான் ரொம்ப சாதாரணம் ஏதோ நாலு பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறதிலே ஒரு சந்தோஷம்.”

“நீங்க சொல்லிவிட்டாப்பிலே ஆச்சுங்களா? நீங்களே சாதாரணம்னு சொன்னா அப்புறம் விசேஷமாச் சொல்றத்துக்கு இந்த நாட்டிலே ஒருத்தனுமே இல்லைன்னுதான் அர்த்தம்.”

“அதெல்லாம் இல்லை! ஏதோ உங்களுக்கு இருக்கிற அபிமானத்திலே என்னை ரொம்பப் புகழறீங்க.”

“இல்லவே இல்லை! நீங்க ‘நோட்ஸ்’ எழுதினால்தான் பிரயோஜனமாயிருக்குமுன்னு மாணவர்களே அபிப்ராயப்படறாங்க. இந்த ஊரிலேயே ஆண்களுக்கும் பெண்களுக்குமாகப் பதினாலு கலைக் கல்லூரிகள் வேறு. எல்லா இடத்திலேயும் ‘எகனாமிக்ஸ்’கு உடனே உங்க பேரைத்தான் சொல்றாங்க.”

“அப்படியா? ஆச்சரியமாயிருக்கே?”

“இதுலே ஆச்சரியத்துக்கு என்ன இருக்குதுங்க”

பேராசிரியர் கள்ளப்பிரான் பிள்ளை இரண்டாவது தடவையாக மூக்குக் கண்ணாடியைக் கழற்றி வைத்துவிட்டுக் காதோரமாகத் தலையைச் சொறிந்தார். சில விநாடிகளுக்குப் பின்பு பேராசிரியர் பேசத் தொடங்கிய பேச்சின் ஆரம்பம் வந்தவருக்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது.

“நோட்ஸ் போடறதாயிருந்தா எத்தனை ஆயிரம் பிரதிகள் அச்சிடலாம்னு நினைச்சிருக்கீங்க?”

“நீங்க எப்படிச் சொல்றீங்களோ, அப்படியே செய்யிறோம் ஸார்.”

“செய்யிறதைப் பற்றி ஒண்னும் இல்லே. ‘நோட்ஸ்’ படிச்சுப் பரீட்சை எழுதறதே கேவலம்னு நினைக்கிறவன் நான் என்னையே ‘நோட்ஸ்’ எழுதச் சொல்றீங்களேன்னு பார்த்தேன்.” என்று மறுபடியும் தலையைச் சொறிந்தார் பேராசிரியர். ‘இந்தக் கள்ளப்பிரான் பிள்ளை நிச்சயமாக ஓர் அப்பாவிதான்’ என்பதை இதற்குள் தீர்மானம் செய்து கொண்டு விட்டான் வந்தவன்.

ஏறக்குறைய ஒரு மணி நேரம் வரை அப்படியும் இப்படியுமாகச் சுற்றி வளைத்துப் பேசிய பிறகு, வந்தவனுக்குத் தாம் விரும்புவதைத் தெரிவிக்கும் அறிகுறியாக வீட்டுக்குள்ளிருந்து ஒரு கப் காபியும் வரவழைத்து அவனுக்குக் கொடுத்துவிட்டார் கள்ளப்பிரான் பிள்ளை ஆள் தன் பக்கம் சாய்ந்துவிட்டார் என்பது அவனுக்குப் புரிந்தது.