பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/550

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

548நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————


கம்பெனிக்காரனுக்குப் பரம சந்தோஷம். பண விஷயமாக வந்தவர் அதைத் தன்னிடம் சொல்லிக் கேட்க முடியாத சூழ்நிலை கடையில் இயல்பாகவே உண்டாகியிருந்ததே என்று பெருமைப்பட்டுக் கொண்டான். கள்ளப்பிரான் பிள்ளை, “அப்ப நான் இப்படி வரட்டுமா? அப்புறம் பார்க்கிறேன்” என்று புறப்பட்டபோது கூடவே எழுந்திருந்த கம்பெனிக்காரன் வாயிற்படி வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்தான். வரட்டுமா என்பதோடு போய்த் தொலையக் கூடாதோ? அப்புறம் பார்க்கிறேன் என்று வேறே சொல்லிவிட்டுப் போகிறாரே! ஒரு வேளை நாளைக்கும் பண விஷயமாகப் பிரஸ்தாபிக்க வரப்போகிறாரோ? என்று எண்ணி, நாளைக்கு இவரை எப்படிச்சமாளிப்பது? என்ற சிந்தனையை இன்றைக்கே ஏற்படுத்திக் கொண்டு கடைக்குள்ளே திரும்பிச் சென்றான், புத்தகக் கம்பெனிக்காரன். கள்ளப்பிரான்பிள்ளை அவர்கள் பொருளாதாரம் + அப்பாவித்தனம் + அசட்டுத்தனம் எல்லாம் நிறைந்தவர் என்பதை நன்றாகப் புரிந்து கொண்டிருந்ததனால், ஊம்! இவர் ஒரு சுண்டைக்காய், இவரைத் தண்ணீர் காட்டி அனுப்புவதா எனக்குப் பிரமாதம்? என்று நினைத்து, கள்ளப்பிரான்பிள்ளையின் மறுநாள் விஜயத்தைப் பற்றிய பிரச்னையை எண்ணி இவ்வளவு கவலைப்படுவதே தன் தகுதிக்குக் குறைவு என்று தீர்மானமாய் அதை மறந்து போக முயன்றான். மறுநாள் சைக்கிள் ரிக்‌ஷாவுக்குக் காசு இல்லையாதலால் கள்ளப்பிரான் பிள்ளை நடந்தே புத்தகக் கம்பெனிக்குப் புறப்பட்டார்.

ஒரே பாடாக ஆளே இல்லை. விசாரித்ததில், “முதலாளி வெளியிலே போயிருக்காக, அவுக வர்ரதுக்கு எந்நேரமாகும்னு தெரியல்லே” என்றான் கடைப் பையன். “கொஞ்சம் இருங்க ஐயா! காபி வாங்கியாரேன்” என்று பையன் தம்ளரை எடுத்துக்கொண்டு புறப்பட்டபோது, “இல்லை தம்பி! வேண்டாம்” எனக் கள்ளப்பிரான் பிள்ளையே மறுத்துவிட்டார். பையனும் போகவில்லை. தாம் சொன்னவுடனே, “இல்லிங்க, கண்டிப்பாகக் காபி குடிக்கனும் என்று வற்புறுத்தாமல் அந்தப் பையன் உடனேயே பேசாமல் இருந்துவிட்டதை அந்தரங்கமாக அவரே வெறுத்தார். அந்த வெறுப்புடன் அங்கு உட்காரப் பிடிக்காதவராய், “தம்பி, நான் வந்திருந்தேன்னு மட்டும் உங்க ஐயா கிட்டச் சொல்லு” என்று கூறிவிட்டுக் கிளம்பினார். பையன் மனத்துக்குள் சிரித்துக் கொண்டு கைகளைப் பெரிதாய்க் கூப்பிக் கும்பிடு போட்டான். ஒரு மணி நேரத்துக்குப்பின் கம்பெனிக்கார முதலாளி கடைக்கு வந்ததும் பையன் பேராசிரியருடைய விஜயத்தைப் பற்றிப் பிரஸ்தாபித்தான்.

“புறப்பட்டுப் போயிட்டாரில்ல? ரொம்ப நல்ல காரியம் பண்ணனே நீ” என்று சொல்லிவிட்டு நாற்காலியில் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு சுகமாக ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துப் புகைக்கலானான். அந்தப் புகையில் பேராசிரியர் கள்ளப்பிரான் பிள்ளையின் ஞாபகமும் சேர்ந்தே புகைந்து போய்விட்டது.

அடுத்து மூன்றாம் நாள் சாயங்காலம் கள்ளப்பிரான்பிள்ளை வந்த போது கடையிலே ஒரு சினிமா நட்சத்திரமும், அவருடைய கணவரென்று உலகத்தாரால் ஒப்புக் கொள்ளப்பட்ட புருஷ ஜன்மமும், மூன்று கல்லூரி மாணவிகளும் இருந்தார்கள். கடை வாசலில் சினிமா நட்சத்திரத்தின் காரைச் சுற்றி ஒரு விடலைக்