பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/551

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

————————————————————————

முதல் தொகுதி / வெறும் புகழ்549

கும்பல் கூடியிருந்தது. இந்த நிலையில் கடைக்குள்ளே நுழைவதற்கே கூசிய கள்ளப்பிரான் பிள்ளை தயங்கித் தயங்கி உள்ளே நுழையவும், கம்பெனிக்காரன் தன்னிடம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவர்களை எல்லாம் விட்டுவிட்டு எழுந்து ஓடிவந்து திருவாளர் பிள்ளையை ஆர்வத்துடன் வரவேற்று முதலில் சினிமா நட்சத்திரத்துக்கு அறிமுகப்படுத்திவிட்டு, அப்புறம் அவளுடைய ‘இவருக்கு’ அறிமுகப்படுத்தியபின் வந்து கூடியிருந்த மாணவிகளுக்கும் அறிமுகப்படுத்தி முறையே அந்த மூன்று அறிமுகங்களாலுமே அவரை வீழ்த்திவிட்டபின் காபி சிற்றுண்டியும் அருந்தச் செய்தாயிற்று. பாவம்! பேராசிரியரான திருவாளர் கள்ளப்பிரான்பிள்ளை மூக்குக் கண்ணாடியைக் கழற்றி மேஜையில் வைத்துவிட்டுக் காதோரமாகத் தலையைச் சொறிந்தார். அதைப் பார்த்து, நிலைமை அபாயகரம் ஆள் வாய்விட்டுக் கேட்டுத் தொலைத்துவிடுவான் போலிருக்கே! என்ற பயத்தோடு, “புரொபஸர் ஸார்! நானே நாளைக்கு உங்களை வீட்டிலே வந்து பார்க்கலாமின்னு இருக்கேன். வீட்டிலே இருப்பீங்களில்ல?” என்று கேட்டான் கம்பெனிக்காரன்.

பேராசிரியர் மலர்ந்து போனார். ‘இவனே நாளைக்குக் கொண்டு வந்து கொடுத்திடறதாக இருக்கான் போலிருக்கே! வாய்விட்டுக் கேட்டு நம்மைக் குறைச்சுப்பானேன்?’ என்ற பிரமையான நம்பிக்கையோடு, “அப்ப நான் வர்றேன். நாளை வீட்டிலேயே இருக்கேன்” எனக் கூறி விடைபெற்றார் கள்ளப்பிரான்பிள்ளை. கம்பெனிக்காரன் நிம்மதியாகப் பெருமூச்சுவிட்டான். கள்ளப்பிரான் பிள்ளையும் நிம்மதியாகத்தான் வீடு போனார். அவர்தாம் இரண்டு சாமர்த்தியங்களுக்கு உரிமையாளராயிற்றே! அப்பாவியாக இருக்க எல்லாராலும் முடிந்துவிடுமா என்ன?

(கலைமகள், தீபாவளிமலர், 1962)