பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/553

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

————————————————————————

முதல் தொகுதி / தர்மோபதேசம்547


“வால்மீகி பகவான் அந்த நாளிலே தசரத சக்ரவர்த்தியைப் பற்றிச் சொல்லியிருக்கிற குணங்கள்ளாம் இன்னிக்கு இவாகிட்ட அப்படியே பொருந்தியிருக்கு. இவாள் மகாக்ஞாதாள். ரொம்ப ச்ரேயஸ் உள்ளவா. பரம பக்தாள்... நல்ல சித்திரை மாசத்து வெயில்லே ஒருநாள் உச்சி வேளைக்கு இவாள் க்ருஹத்துக்குப் போயிருந்தேன்...அப்பப் பாருங்கோ... இவா தன் கையாலேயே நல்ல காபூல் மாதுளம் பழமாப் பார்த்து எடுத்து ஜூஸ் பிழிஞ்சு கொடுத்தா. எதுக்குச் சொல்ல வந்தேன்னா... இவா அப்படி ஒரு ஆஸ்திகப் பற்றுள்ளவா...” என்று நடுவிலேயே தசரதச் சக்ரவர்த்தியை நிராதரவாகவோ, நிர்க்கதியாகவோ, விட்டுவிட்டு எதிரே உள்ள பிரமுகருக்கு டபிள் கலர் விளம்பரம் இரண்டு பத்தி நாலு காலம் போட்டு வைப்பார். அவர் தர்மோபதேசம் - அதாவது இந்தக் கலியுகத்திலே தர்மத்தை இரட்சிப்பதற்காக உபதேசம் செய்கிறவர் என்பதைவிட, உபதேசம் செய்வதற்கு இதுதான் வழி என்று தாமாகவே ஒரு தர்மத்தைப் படைத்துக் கொண்டிருப்பவர் என்பதே பொருத்தமாயிருக்கும் என்பேன் நான்.

இங்கே இதுவரை சொன்னவற்றைக் கதாநாயகர் பற்றிய அறிமுகமாக நீங்கள் வைத்துக் கொண்டால் இனிமேல்தான் கதை ஆரம்பமாகிறது என்று சொல்ல வேண்டும்.

ஸ்ரீரீமத் தீட்சிதர் அவர்கள் தம்முடைய உபன்யாசங்களுக்கு நடுவே அடிக்கடி உத்தமமான மக்கள் அனுசரிக்க வேண்டிய குணங்களைப் பற்றியும் தர்மங்களைப் பற்றியும் நிறையச் சொல்லுவார். தர்மங்களை உபதேசம் செய்வதென்றால் அவருக்கு அபாரமான உற்சாகம் பிறந்துவிடும். நியாயமாகக் கடைப்பிடிக்க வேண்டியவை என்று வேதங்களும், சாஸ்திரங்களும் கடைப்பிடிக்கச் சொல்லி வற்புறுத்துகிறவற்றை எடுத்துக் கூறுவதைத் தமது மேலான கடமையாகக் கொண்டிருந்தார் அவர். யதார்த்த உலகத்தின் கஷ்ட நஷ்டங்களுக்கு ஒத்து வராத தர்மங்களை உபதேசம் பண்ணிக் கொண்டும், ஒத்துவருகிற தர்மங்களைச் செய்ய மறந்தும் எப்படிஎப்படியோ வாழுகிற பாபாத்மாக்களை இரட்சிக்கும் பொறுப்பு தீட்சிதரிடமிருந்தது. அவர் அடிக்கடி உபதேசம் பண்ணுகிற தர்மங்களில் ஒன்றுதான் ஏழைச் சுமங்கலிப் பெண்களுக்குப் புடவை தானம் பண்ணுவது.

“வேத தர்மங்கள்ளாம் நசிச்சுப் போயிண்டே வரது... கலி காலத்துலே நாம ரொம்பக் கெட்டுக் குட்டிச் சுவராய்ப் போயிட்டோம். சின்னஞ்சிறுகள் எல்லாம் தலையெடுத்து என்னென்னவோ பேசறதுகள்... வெள்ளிக்கிழமையில் ரெண்டு மஞ்சள் கிழங்கும், வெற்றிலை, பாக்கும் வைத்து ஏழைச் சுமங்கலிக்கு ஒரு வஸ்த்ரம் தானம் பண்ணினால் சோமயாகம் செய்த பலன் இருக்கும். இந்த நாளிலே யார் இதெல்லாம் செய்யறா..? ரெண்டு ரூபாயும் மூன்று ரூபாயும். கொடுத்து டிக்கட் வாங்கிச் சினிமாவுக்குப் போறதுகள். தர்மம் தானத்தைப் பற்றிக் கவலைப்படறவா குறைஞ்சு போயிட்டா. லோகத்திலே ஆஸ்திகாள் க்ஷீணிச்சுப் போயிருக்கா” என்று மனம் நொந்து போன துயரமான குரலில் ஸ்ரீமத் தீட்சிதர் அவர்கள் தமது உபன்யாசங்களுக்கு நடுவே தர்மத்தை ஞாபகப்படுத்துவார். அது அவர் கடமை.