பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/554

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

552நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————


பிரம்மஸ்ரீ தீட்சிதருடைய கதைகளில் இராமாயணம், பாகவதம், பாரதம், எல்லாம் நிறைவடைகிற பட்டாபிஷேக தினங்களில் நாற்பது ஐம்பது ஜோடி புது வேஷ்டிகளும், புதுப்புடவைகளும் குவியும். இந்த விதமாகக் கதாகாலட்சேபம் செய்கிறவர்களில் இவருக்குத்தான் ‘ஸ்டார் வால்யூ’ அதிகமாகையினால் வருமானமும் அதிகம். தர்மத்தை நினைப்பதற்கும் பேசுவதற்கும் எல்லா உபன்யாசகர்களாலும் முடியும் என்றாலும் தர்மத்தைச்சார்ந்து புகழும் பெருமையும் அடையச் சிலரால்தான் முடியும். ‘தர்மத்தை உணர்ந்து கடைப் பிடிக்கிறவர்கள் ஒரு வருமானமும் அடைய முடியாது; தர்மத்தை உபதேசம் மட்டும்தான் செய்யனும். இந்த இரகசியம் ஸ்ரீமத் தீட்சிதர் அவர்களுக்குப் புரிந்திருந்ததைப் போல மற்ற உபன்யாசகர்களுக்குப் புரியவில்லை. அதனால் அவர்கள் எல்லாம் தங்கள் தொழிலில் ‘ஸ்டார்’ ஆகவும் முடியவில்லை. ஒளிபரப்பவும் முடியவில்லை. ஒரு தேங்காய் மூடிக்குப் புரந்தர தாஸரின் கதையைச் சொல்லிக் கொண்டும் ஐந்து ரூபாய்ப் பிரயோசனத்துக்காகத் துருவன் சரித்திரத்தை விவரித்துக்கொண்டும் அவர்கள் எல்லாம் ‘ஸ்டார் வால்யூ’ இல்லாமல் கஷ்டப்பட்டார்கள். அவர்களுக்கு எல்லாம் பிரம்மஸ்ரீ தீட்சிதருடைய புகழில் பொறாமையுண்டு. இருந்தும் என்ன? பொறாமைப்படத் தெரிந்தால் மட்டும் போதுமா? கெட்டிக்காரன் புகழை அடைவது எப்படி என்பதை யோசிக்க வேண்டுமே ஒழியப் பொறாமைப்படுவது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கக்கூடாது! புரிகிறதா?’

ஸ்ரீமத் தீட்சிதருடைய உபன்யாசங்களுக்கு நாள் தவறாமல் விஜயம் செய்து கொண்டிருந்த பெருமக்களில் இளைஞனாகிய முத்துசாமியும் ஒருவன். இன்றைய நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு முடிவு தேட இப்படி மந்தமான கதாகாலட்சேபங்களும், சாதி முறைகளை நினைவூட்டக்கூடிய மேற்கோள்களும் நிச்சயமாகப் பயன்படமாட்டா என்று தெரிந்திருந்தும் முத்துசாமி வேண்டுமென்றே ஒரு காரணத்துக்காக இந்தக் கூட்டங்களுக்குப் போய் வந்து கொண்டிருந்தான். ஒரு விஷயத்திலுள்ள குற்றங்குறைகளை அணுகித் தெரிந்து கொள்ளாமல் கேலி செய்யவோ, இகழவோ கூடாதென்று நினைக்கிற கொள்கையுடையவன் முத்துசாமி.


நடைமுறையில் யதார்த்த உலகத்திலுள்ள கஷ்டங்களுக்கு விடிவு தேடாமல் மேடைத் தர்மோபதேசம் செய்கிறவர்களைக் கண்டுபிடித்துக் களையெடுக்க வேண்டியது நாம் செய்கிற நற்பணிகளில் ஒன்று என்று நம்புகிறவன் முத்துசாமி. அப்படிக் கண்டுபிடிக்கிற வாய்ப்பும் விரைவில் அவனுக்கு ஏற்பட்டது.

அன்று தீட்சிதருடைய கதையில் பட்டாபிஷேக தினம். கதை நிகழ்ந்த மேடையில் பட்டுப் புடவைகளும், நூற்புடவைகளும் (சரிகைக் கரையிட்டவை) வேஷ்டிகளும், பழக்கூடைகளுமாக நிரம்பியிருந்தன. பிரமுகர்களும், பணக்காரர்களும், ஆஸ்திகப் பெருமக்களும், சூட்டிய மாலைகள் வேறு மலை மலையாகக் குவிந்து கிடந்தன. உபன்யாசகரான தீட்சிதர் புறப்படப் போகிறார். அவர் ஒரு காரிலும், அவருக்குக் கிடைத்திருந்த புடவைகள், புது வேஷ்டிகள், பழக்கூடைகள் வேறொரு காரிலுமாகச் செல்வதற்கு ஏற்பாடாகியிருந்தது. மேடைக்குப் பின் பக்கமாக அப்படியே நாலைந்து