பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



வைப்பார்களே தெரியுமா? அதேபோல - ஆனால் உயிருள்ள ஒரு தெய்வச் சிலையாக அழகெல்லாம் திரண்ட பிம்பமாய் நீ எனக்கு முன் உட்கார்ந்து கொண்டிருந்தாய். எனக்கு அப்படியே உன்னைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று ஆசை ஆனால் உன் மாமா இருந்தார்; என் நண்பர் இருந்தார். ஆசையை வெட்கம் அடித்துவிட்டது. துணிவு பதுங்கிக் கொண்டது.

“தமிழ்க் கீர்த்தனம் தெரிந்தால் ஏதாவது ஒன்று பாடு, பார்ப்போம்!” உன்னை நேரடியாக ஏறிட்டுப் பார்க்கத் துணிவில்லை. எங்கோ பார்த்துக் கொண்டு தான் இப்படிச் சொன்னேன். நீ கொஞ்சம் யோசித்தாய் போலிருக்கிறது. நான் வீணையை உன் பக்கமாக நகர்த்தினேன்.

உன் மாதுளை மொட்டுப் போன்ற விரல்கள் வீணைத் தந்தியின் மேல் படிந்தன.

‘நமக்கினி நம பயமேது? - தில்லை

நடராஜன் இருக்கும்போது.”

நந்தனார் சரித்திரக் கீர்த்தனை உன் கண்டத்திலிருந்து கணீரென எழுந்தது. வீணையின் ஒத்துழைப்பு அபாரம்! நீ பாடினாய், இல்லை அமுதத்தை வர்ஷித்தாய்.

சதைப் பிண்டமாகிய சாதாரணத் தொண்டையிலிருந்து பிறந்த வெறும் குரலா அது? அமுதம், குயில், தேன், பால், கற்கண்டு, எல்லாமாகிய கலப்பின் இனிமைக் கிளர்ச்சி அல்லவா அது?

மாலா! அன்றைக்கு அந்த ஒளி மங்கிய மாலை நேரத்தில் ஜடப்பொருளான எனது வீணையின் தந்திகளை மட்டுமா நீ வருடினாய்? அல்ல! உன் எதிரே கல்லாய், சிலையாய், உணர்வை எல்லாம் பறி கொடுத்து வீற்றிருந்த என் இதயத்தின் அணுஅணுவான மெல்லிய நரம்புகளையெல்லாம் அல்லவா மீட்டினாய்?

“என்ன சார்? இவள் சாரீரம் எப்படி?” உன் மாமாவின் குரல் என்னை இந்த உலகிற்குக் கொண்டு வந்து சேர்த்தது. நீ பாடிநிறுத்தியிருந்தாய். அலர்ந்த ரோஜாவின் நிலையில் பனித்துளிகளைப் போல் உனது செம்பொன் நிறமான முகமண்டலத்தில் முத்து முத்தாக வியர்வைத் துளிகள் அரும்பியிருந்தன. உனது மாமாவின் கேள்விக்கு நான் கூறப்போகும் பதிலை அறிந்து கொள்ளும் ஆர்வத்தால் உன் விழிகள் குனிந்த நிலை நிமிராமலே என் முகத்தை ஒருக்கொளித்துப் பார்த்தன.

"சாரீரமா?இது சாதாரண சாரீரமில்லை.தெய்வீக சாரீரம்! இவளுக்குச் சொல்லிக் கொடுக்காவிட்டால் அந்தப் பாவம் ஏழேழு ஜன்மத்துக்கு என்னைச் சும்மாவிடாது.” இப்படிச் சொல்லிவிட்டு ஜாடையாக உன் முகத்தைப் பார்த்தேன் நான். இருப்பிடம் தெரியாமல் மணக்கும் மனோரஞ்சிதப்பூவின் மணத்தைப் போல உதடுகள் அசையாத நுணுக்கமான நாணங்கலந்த புன்னகை ஒன்று இதழ்களிடையே நெளிவதைக் கண்டேன். அதே சமயத்தில், கயல்மீன்களைப் போல பாலைப் பூசி நடுவே கருமணி பதித்தாற்போல, நெஞ்சை அள்ளும் உனது நயனங்களை எனது நயனங்களால் துழாவினேன்.