பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/564

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75. பேதைமை


ங்கு அக்காவை ரேழியில் எடுத்து விட்டிருந்தார்கள். காலை ஏழரை மணி.

“அக்கா அக்கா சாதம் போடு அக்கா.”

“…”

“பசியாயிருக்கு அக்கா…”

“…”

“நீ இன்னும் தூங்கறியேஅக்கா? என்னிக்கும் நீ சீக்கிரமா எழுந்து விடுவியே! இன்னிக்கு மட்டும் ஏன் அக்கா இன்னும் தூங்கறே?”

“…”

“களைப்பா இருக்கா?”

“…”

“இவாள்ளாம் ஏன் ஒன்னைச் சுத்தி உக்காந்து அழறா?”

“…”

“சொல்ல மாட்டியா அக்கா?”

“…”

“இவாளுக்கும் பசிக்கிறதா?” குழந்தை ராமுவின் கேள்விக்குத் தரையில் படுத்துக் கிடந்த ரங்கு அக்கா பதிலே சொல்லவில்லை.

ராமுவுக்கு அதற்கு மேல் பொறுமை இல்லை. கேள்வி கேட்பதை நிறுத்தி விட்டு, அக்காவின் தலையைத் தன் பிஞ்சுக் கைகளால் பிடித்து ஆட்டத் தொடங்கினான்.

அக்காவைத் தூக்கத்திலிருந்து எழுப்பிச் சாதம் போடச் சொல்ல வேண்டும் என்பது அவன் எண்ணம்.

அக்காவின் தலை, இரண்டு பக்கத்திலும் அவன் தள்ளியபடியெல்லாம் புரண்டு விழுந்தது. சுற்றி அழுது கொண்டிருந்தவர்களில் வயதான ஒரு அம்மா, “ஏண்டா தொணதொணன்னு பேசிண்டு…? அக்கா இனி மேல் எழுந்திருக்கவே மாட்டாடா! அந்தண்டே போ” என்றாள்.

ராமு விடவில்லை!