பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/568

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

566நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————


ன்றைக்குக் காரியங்கள் ஒருவழியாக முடிந்து விட்டன. வேங்கடராம ஐயர் மயானத்திலிருந்து வீடு திரும்பும்போது மணி நாலுக்குமேல் ஆகிவிட்டது.

குழந்தை ராமுவைக் கொண்டுபோன மனிதர் ஏழு மணி சுமாருக்குத் திரும்பக் கொண்டுவந்து விட்டார்.அப்போது அவன் தூங்க ஆரம்பித்திருந்த சமயம். அதனால் வேங்கடராம ஐயர் அதிகச் சிரமம் இன்றி அப்படியே படுக்கையில் வாங்கி விட்டுவிட்டார்.

ஓர் உயிரைப் பறிகொடுத்த துக்கம்! விடிய விடிய உறக்கம் அவரை அண்டவில்லை. குழந்தை ராமுவோ விடிகிற வரை நிம்மதியாகத் தூங்கினான்.

பொழுது விடிந்தது. விடிகிற சமயத்தில்தான் அவருக்கு இலேசாகக் கண்களைச் சொருகிற்று. அந்தச் சமயம் பார்த்துத்தான் குழந்தை ராமு விழித்துக் கொண்டான்.

“ரங்கு அக்கா எங்கேப்பா? எழுந்திருக்கிலியா?”

“ரங்கு அக்கா இல்லேடா நீ தூங்கு”

“அக்கா எங்கேப்பா?”

“தூங்கித்தொலைடா! என் பிராணனை வாங்கறே.அவ செத்துப் போயிட்டாடா.”

“செத்துப் போறதுன்னா என்ன அப்பா?”

“சீ. கழுதை! தூங்கறியா, உதை வேணுமா?”

“ரங்கு அக்கா வேணும். எனக்கு அக்காவைப் பார்க்கணும். உம் ஊம் ஊம்.” குழந்தை ராமு மறுபடியும் அழ ஆரம்பித்துவிட்டான்.

ராமுவை அந்த வருடம்தான் பள்ளிக்கூடத்தில் ஒண்ணாங் கிளாளபில் சேர்த்திருந்தது. வீட்டில் அவனைச் சமாதானப்படுத்துவது கஷ்டம் என்று மெல்ல எப்படியோ அக்காவைப் பற்றி மறக்கச் செய்து அவனைப் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பிவிட்டார் அன்று.

அவன் பள்ளிக்கூடத்துக்குப் போய் விட்டதனால் அன்று காலையில் செய்ய வேண்டிய இரண்டாம் நாள் சஞ்சயனக் கிரியைகளைத் தடங்கலில்லாமல் நேரத்தோடு அவரால் செய்ய முடிந்தது.

அதே தெருவிலிருந்து இரண்டாம் கிளாஸ் படிக்கிற பையன் ஒருவன் பள்ளிக்கூடத்துக்குப் போனான். அவன் ராமுவின் மேல் வீட்டுக்காரப் பையன். ராமுவை விட ஒரு வயது பெரியவன். அவனோடுதான் ராமுவைச் சமாதானப்படுத்திப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பியிருந்தார் அவனுடைய அப்பா.

அந்தப் பையன் பெயர் கோவிந்தன். ராமு அவனைக் ‘கோந்து’ என்று கொச்சையாகக் கூப்பிடுவது வழக்கம். அன்று பள்ளிக்கூடம் போகும்போது ராமு ‘கோந்து’விடம் சில கேள்விகளைக் கேட்டான்.

“ஏன்டா கோந்து, ஒன்னை ஒண்ணு கேக்கறேன், பதில் சொல்லுவியோ?”