பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / அலைபட்ட கடலுக்கு மேலே ★ 55



உன் விழிகளில், விழிகளின் மையமான கரு மணிகளில், கருமணிகளின் நுண்ணொளியில் - அந்த நுண்ணொளியின் பொருளில், பொருள் வரம்புக்கு உட்படாத ஒரு மெல்லிய உணர்வு கிளர்ந்து கொண்டிருந்தது. அது எனக்கு மட்டும் புரிந்தது.

இப்போது மீண்டும் என் தோள்துண்டு நழுவியது! கவனக்குறைவாக இருந்துவிட்டேன். அந்த நொண்டிக்கை. அதை நீ பார்த்துவிட்டாய். தவறு... நீ பார்க்கும்படியான ஒரு சந்தர்ப்பத்தை என் அஜாக்கிரதையினால் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டேன்.

நீ பார்க்கவிடக்கூடாது என்று எதை ஜாக்கிரதைப்படுத்தினேனோ அதையே பார்த்துவிட்டாய்! என்னுடைய இந்த ஊனம் உன்னிடம் பயத்தையும், பரிதாபத்தையும் ஒரே சமயத்தில் உண்டாக்கியிருக்கிறது என்பதை உன் விழிகளின் சலனத்திலிருந்து நான் புரிந்து கொண்டேன். என்னுள் ஒரே குமுறல்; நீ என்னைப் பற்றி என்ன நினைக்கிறாயோ என்ற கொந்தளிப்பு:இனம் புரியாத ஏக்கம்.நான் ஒரு முடவன் ஐயோ நான் ஏன் முடவனானேன்?.

"அப்போ. நாளைக்கு முதல் தேதி. நாளையிலிருந்து டியூஷனைத் தொடங்கிவிட்டால் கணக்காக இருக்கும்.” உன் மாமா மீண்டும் குறுக்கிட்டார்.

“ஆகா! அப்படியே செய்வோம். நாளைக்கு இதே வேளைக்கு அனுப்பிவிடுங்கள். உங்களிடம் வீணை இருந்தால் கொடுத்து அனுப்புங்கள்; இல்லையானால் அதற்காக இப்போது பணம் செலவழித்து வாங்க வேண்டாம். இருக்கிறது. இதை வைத்துப் பார்த்துக் கொள்ளலாம்” நான் மறுமொழி கூறினேன். உன் மாமா எழுந்தார்.

“வாம்மா, போகலாம்! குருவுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு எழுந்திரு ”உன்மாமா உன்னை அழைத்தார். மேல் துண்டின் மறைவிலிருந்த என் நொண்டிக் கை வெட வெட என்று புறாவின் சிறகுகள் குளிரில் உதறுவது போல் நடுங்கின.

நீ எழுந்திருந்தாய். நமஸ்காரம் செய்தாய். நமஸ்காரம் செய்வதற்காகக் குனியும்போது உன் கண்கள் என்னிடம் - எனது முகத்தில் எதையோ தேடின!

அப்புறம்? அப்புறம் என்ன? நீயும் உன் மாமாவும் நண்பரும் விடைபெற்றுக் கொண்டு போய்விட்டீர்கள்.

சாயை

சாயை! எதனுடைய சாயை? காலத்தின் சாயை! எண்ணங்களின் சாயை! காலத்திலும் எண்ணத்திலும் குழம்பி உன்னை நானும் என்னை நீயும் புரிந்து கொண்டோமே, அந்த மனோரம்மியமான உணர்வின் சாயை!

ஒன்றா? இரண்டா? ஒன்பது மாதங்கள்! நீ என்னிடம் படிக்க வந்து முக்கால் வருஷம் ஆகிவிட்டது. ஆகா! இந்த நாட்கள், இந்த வாரங்கள், இந்த மாதங்கள், இவைகள் யாரைத் தேடி ஒடுகின்றன? இவைகளுக்கு ஏன் இவ்வளவு வேகம்? எதற்காக இந்தக் கொள்ளைபோகிற அவசரம்?