பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/570

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

568நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————


கோவிந்தனோ ராமுவுடன் பேசி முடித்ததுமே அந்தப் பிரச்னையை மறந்துவிட்டான்.

குழந்தையுள்ளம் பேதைமை நிறைந்தது. நன்மையோ, தீமையோ, கேட்பன வெல்லாமே அங்கு நம்பிக்கைக்குரிய உண்மைகளாகப் பதிந்துவிடுகின்றன. செத்துப் போவதைப் பற்றிக் கோவிந்தன் கூறிய ‘உண்மைகளும்’ இப்படித்தான் குழந்தை ராமுவின் மனத்தில் பதிந்துவிட்டன.

கல் பன்னிரண்டரை மணிக்குப் பள்ளிக்கூடம் விட்டார்கள். ராமு பையை எடுத்துக்கொண்டு கோவிந்தனின் துணையை எதிர்பார்க்காமலே வீட்டுக்கு ஓடினான்.

வீட்டு வாசல் திண்ணையில் இரண்டாம் நாள் காரியங்களை முடித்துவிட்டு யாரோ துக்கம் விசாரிக்க வந்தவர்களோடு பேசிக்கொண்டிருந்தார் வேங்கடராம ஐயர்.

ராமு பள்ளிக்கூடத்திலிருந்து வந்து உள்ளே சென்றதை அவர் கவனிக்கவில்லை.

பத்து நிமிஷங்கள் கழிந்தன. கொல்லைப்புறம் கிணற்றிலிருந்து தண்ணீரில் கல்லைத் தூக்கிப் போட்ட மாதிரி ஓர் ஒசை வந்தது. வேங்கடராம ஐயரருகில் இருந்த இருவரும் திடுக்கிட்டனர். “அது என்ன சார்? கொல்லையில் சப்தம் கேட்கிறது?” என்று வந்தவர்கள் திகைப்போடு கேட்டனர். சிறிது நேரத்தில் மூவரும் எழுந்திருந்து கொல்லைப்பக்கம் சென்று கிணற்றை எட்டிப் பார்த்தனர்.

ராமு தண்ணீரை விழுங்கி விழுங்கி, உடல் மேலும் கீழுமாகப் போய்வர, நீர்ப்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்தான். வேங்கடராம ஐயர் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு பதறியழுதார். பக்கத்தில் இருந்தவர்களில் ஒருவர் கயிற்றைக் கட்டிக் கொண்டு அவசர அவசரமாகக் கிணற்றுக்குள் இறங்கினார்.

குழந்தை ராமு கிணற்றில் நிறையத் தண்ணீரைக் குடித்திருந்தான். உடம்பு ஊதி வெளுத்திருந்தது. வயிற்றிலிருந்த தண்ணீரையெல்லாம் வெளியேற்றிப் பிரக்ஞை உண்டாக்குவதற்கே மாலை ஆறு மணி ஏழு மணிக்குமேல் ஆகிவிட்டது.

பிரக்ஞை வந்தும் அவன் தன்நினைவோடு பேசவில்லை. ‘குழந்தை ஏன் இப்படிச் செய்தான்? தவறிப்போய்க் கிணற்றில் விழுந்தானா அல்லது வேண்டுமென்றே விழுந்து விட்டானா?’ என்பது தெரியாமல் தவித்தார் வேங்கடராம ஐயர்.

மறுநாள் காலையில்தான் ராமு பிரக்ஞையுடன் தெளிவாகப் பேசவும் செய்தான். அவன் வாயிலாகவே விஷயத்தைத் தெரிந்து கொள்வதற்காக மெல்ல அவனைக் கேள்விகள் கேட்டார் அவர்.

“ஏன்டா கிணற்றில் விழுந்தாய்?”

“விழவில்லை! நானாகவே வேண்டுமென்றுதான் குதித்தேன்.”

“ஏன் குதித்தாய்?”