பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/572

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76. மங்கியதோர் நிலவினிலே

ரு ஞாயிற்றுக்கிழமை காலை சரியாகச் சொல்லி வைத்தாற் போல் ‘டாண்’ என்று ஒன்பதடித்து முப்பது நிமிஷத்திற்கெல்லாம் ‘பரமசிவம்’ என்னைத் தேடிக் கொண்டு வந்து சேர்ந்தார். காட்டிலாக்கா அதிகாரியும், எனது நண்பருமான பூவுலகத்துப் பரமசிவனைத்தான் இங்கே குறிப்பிடுகிறேன்.

“ஸார் என்னைக் குமிழி - தேக்கடி ஏரியாவுக்கு மாற்றி விட்டார்கள். இன்னும் இரண்டு நாட்களில் புறப்பட வேண்டும்” வந்ததும் வராததுமாகப் பரமசிவம் இப்படி ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டார்.

“அட பாவமே! நீரும் மாற்றிப்போகிறீரா? பேச்சுத் துணைக்கு ஒரே ஒரு நண்பராக இருந்தீர். இனி என் பாடுதான் திண்டாட்டம்”

“மதுரை ஜில்லாவுக்குள்தானே இருக்கிறேன். ஐம்பது அறுபது மைல் ஒரு பெரிய தொலைவா? அடிக்கடி இங்கே வராமலா போய் விடுவேன்?”

“சரி போய் வாருங்கள்!”

“உங்களுக்கும் இப்போதுதான் கோடை விடுமுறையாயிற்றே.இங்கே வெயில் உச்சி மண்டையைப் பிளக்கிறது. நான் போய் ஒரு வாரத்தில் கடிதம் எழுதுகிறேன். தேக்கடியில் வந்து என்னோடு பத்துப் பதினைந்து நாட்கள் தங்கியிருங்களேன். பெரியாறு ஏரியும் அணைக்கட்டும் அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள்” என்றார்.

“நீங்கள் போய் வேலையை ஒப்புக் கொண்ட பின் வசதியை அனுசரித்துக் கடிதம் எழுதுங்கள்” என்றேன் நான்.

நண்பர் பரமசிவம் விடை பெற்றுக்கொண்டு போய்ச் சேர்ந்தார்.

2

மதுரைப் பிரதேசத்தைப் பொன் கொழிக்கச் செய்யும் பெரியாறு நீர்ப் பாசனத் திட்டத்தை மேற்பார்க்கும் ஆபீஸ் ஒன்று, மதுரை நகரில் தல்லா குளத்திற்கு அருகே சொக்கிக் குளத்தில் இருக்கிறது. நேற்று வரை நண்பர் பரமசிவம் இங்கேதான் வேலை பார்த்து வந்தார். மிக விரைவிலேயே எப்படியோ இருவரும் நெருங்கிப் பழகி விட்டோம். கலா சாலையில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியனுக்கும், காட்டிலாக்கா உத்தியோகஸ்தனுக்கும் இந்த மாதிரி ஒரு நெருக்கம் ஏற்பட்டது வியப்புக்குரிய விஷயம்தான்!