பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/574

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

572நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————

மாகாண எல்லை. அதற்கு அப்பால் திருவனந்தபுரம் ‘ஸ்டேட்’ எல்லை. இந்த மேல்கோடி ஊர்களுக்கு இருப்புப் பாதை மார்க்கம் கிடையாது. பஸ் பிரயாணம்தான். மதுரையிலிருந்து கம்பம் வரைக்கும் ஒரு பஸ். கம்பத்தில் குமிழி பார்டர் (எல்லை) வரை, மலைப் பிரயாணத்துக்கு வசதியாக அமைக்கப்பட்ட குறைவான பிரயாணிகளைக் கொண்ட வேறோர் பஸ். செங்குத்தாக 'S' 'Z' என்ற ஆங்கில எழுத்துக்கள்போல் வளைந்து வளைந்து செல்கிற மலை ரஸ்தா. பிரயாணம் இன்பகரமாகத்தான் இருந்தது.ஆனால் அபாயமும் பயமும் நிறைந்த ஒரு ரஸ்தா அது! பஸ் ‘மக்கர்’ செய்துவிட்டால் கூண்டோடு கைலாசம்தான்.

குமிழியில் ‘பரமசிவம்’ தயாராக என்னை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்.அவருக்கு ஒரே மகிழ்ச்சி.நான் வந்த சந்தோஷத்தில் அப்படியே சிறு குழந்தை மாதிரிக் கட்டித் தழுவிக்கொண்டு விட்டார். அங்கிருந்து தேக்கடிக்கு ஓர் ஒற்றை மாட்டு வண்டியில் போய்ச் சேர்ந்தோம். உண்மையிலேயே அந்த இடத்தின் மலை வளம் அபாரமானதுதான்.

தேக்கடி என்ற இடம்தான் பெரியாறு ஏரியின் நுனிப் பகுதி.அங்கிருந்து மலையை அடியில் குடைந்து தண்ணீரை அந்த குடைவின் வழியாக அடிவாரத்துக்குக் கொண்டு வருகிறார்கள். மலையின்மேல் குடைவில்தான், தண்ணீர் ஏரியிலிருந்து கிளம்பும் இடத்தில்தான், பிரதானக் கால்வாய் இருக்கின்றது. இதன் அருகே ஒரு மேட்டில் பரமசிவத்தின் வீடு இருந்தது. அருகே ‘பி.டபிள்யூ டி குவார்டர்ஸை’ச் சேர்ந்த பல சிறுசிறு வீடுகள் இருந்தன. அது மலேரியாப் பிரதேசமாகையினால் சர்க்கார் ஊழியர்களின் செளகரியத்திற்காக நிறுவப்பட்டிருந்த ஆஸ்பத்திரி ஒன்றும் அங்கே இருந்தது. இந்தக் கட்டிடங்களுக்கும் இதைச் சுற்றி இருந்த அடர்ந்த தேக்குமரக் காட்டிற்கும் சேர்ந்து மொத்தமாக ஏற்பட்டிருந்த பெயர்தான் ‘தேக்கடி’ என்பது.

பரமசிவத்திற்குப் பரம சந்தோஷம் எனக்கு உபசாரங்களெல்லாம் தடபுடல்தான். நான் திணறிப்போகும்படி ஜமாய்த்துவிட்டார்.

“ஸார்! நீங்கள் வந்ததும், ஏதோ இழந்துபோன குபேர சம்பத்தைத் திரும்பப் பெற்றுவிட்டதுபோலத் தோன்றுகிறது. சென்ற ஒரு வாரமாக வலது கை ஒடிந்து போனவன் மாதிரி தவித்துப் போனேன். எனக்கு என்னவோ மாதிரி இருந்தது.”

“உங்களுக்கு மட்டும்தானா அப்படி? நீங்கள் இங்கே மாற்றலாகி வந்தீர்களோ இல்லையோ; அங்கே மதுரையில் எனக்கு ஒரு காரியமும் ஒடவில்லை. அஞ்சாறு மாசம்தான் என்றாலும் கண்ணுக்குக் கண்ணாக, உயிருக்கு உயிராக, அவ்வளவு தூரம் இணக்கமாகப் பழகிவிட்டோமே.”

“இப்படியே விடுமுறை பூராவும் இங்கேயே இருந்து விடுங்களேன்.” பரமசிவத்தின் வேண்டுகோளுக்குப் பதில் சொல்லாமல் சிரித்தேன்.

“என்ன சிரிக்கிறீர்கள்?”