பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/575

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————————

முதல் தொகுதி / மங்கியதோர் நிலவினிலே573


“இந்த அன்பு எவ்வளவு தூரம் மனிதர்களைப் பைத்தியங்களாக்கி விடுகிறதென்று நினைத்துக் கொண்டேன். சிரிப்பு வந்துவிட்டது.”


“எப்படியோ போகிறது! ஒரு மாசமாவது இருந்துவிட்டுப் போங்கள்.”

“இருக்க முடிந்தால் பார்க்கிறேன்.”

“அது சரி! இன்று பெளர்ணமி. நிலாவில் ஏரிப் பிரயாணம் மனோரம்யமாக இருக்கும். விசைப் படகுக்கு ஏற்பாடு செய்து விடுகிறேன். இரவுச் சாப்பாட்டுக்கு மேல் ஒன்பது மணிக்குப் புறப்படுவோம். கரையோரத்தில் யானை, மான், காட்டுமாடு, முயல்கள், கரடிகள் எல்லாம் மந்தை மந்தையாகத் திரிவதைப் படகில் இருந்தே பார்க்கலாம்.”

“தாராளமாக கரும்பு தின்னக் கூலியா? நான் தயார். புது இடத்தில் எனக்கும் உறக்கம் வராது.”

ரமசிவம் நிலவில் ஏரிப்பிரயாணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டு வந்தார். ‘ஏறக்குறைய அறுபது மைல் விஸ்தீரணம் மூலை முடுக்குக்களாகப் பிரிந்து, பிரிந்து உப்பங்கழிகளைப்போல நீளமாகச் செல்கிறது’ என்று பெரியாறு ஏரியைப் பற்றி எங்கோ படித்து அறிந்து கொண்டிருந்தேன்.

இரவு நிலாவில் பிரயாணம் செய்யும்போது நான் கேள்விப்பட்டிருந்த உண்மையை நிதரிசனமாகக் கண்டேன். தண்ணீரில் நனைந்த வெள்ளைத் துணிபோல் நிலா மங்கலாக அதிக ஒளியில்லாமல் தேவையான ஒளியுடன் காய்ந்து கொண்டிருந்தது. பாலில் தோய்த்து எடுத்த நீலநிற வைரக்கற்களைப் போல, நிலா ஒளியில் மலைச் சிகரங்கள் அழகாகக் காட்சி தந்தன. விசைப் படகு நீரைக் கிழித்துக்கொண்டு சென்றது. படகில் பரமசிவம், நான், அதை ஒட்டுகின்ற ஆள், ஆக மூவரே இருந்தோம். பெட்ரோலில் இயங்கும் மோட்டார் டைனமோவின் ‘டபடபடபடப’ வென்ற சப்தமும், நீர் கிழிபட்டுச் சிதறும் ஒலியுமாக, அந்த நேரத்தின் அமைதியைக் குலைத்தது. ஏரி தேக்கப்படுவதற்கு முன்பே இருந்த மரங்கள், ஏரியின் இடையே பட்டுப்போய் மொட்டை மொட்டையாக நின்றன. தண்ணீர் தேங்குமுன் அவற்றை வெட்டாமல் விட்டதின் விளைவு இது.

ஏரி சில இடங்களில் அகன்றும் சில இடங்களில் குறுகியும் அமைந்திருந்தது. கரைகளில் கும்மென்று மரங்கள் இருண்டு அடர்ந்து வளர்ந்திருந்தன. அந்த மனோரம்யமான பிரயாணம் ஏதோ ‘பூலோகத்திலுள்ள சொர்க்கத்தின் வழி’ என்று தோன்றியது எனக்கு. இந்த அருமையான காட்சியை என் நண்பர் பரமசிவத்தால் அல்லவா நான் காண முடிந்தது? அவருக்கு எவ்வளவு நன்றி செலுத்தினாலும் தகுமே?

படகு போய்க் கொண்டே இருந்தது. இரண்டு மூன்று மைல்களைக் கடந்து வந்து விட்டோம்.

“அதோ பார்த்தீர்களா?” - பரமசிவம் தொலைவில் கரையோரத்தைச் சுட்டிக் காட்டினார்.