பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/576

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

574நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————


அந்த இடத்தில் நிலாவின் மங்கிய ஒளியில், ஐந்தாறு யானைகள் நீர் பருகிக் கொண்டிருந்தன. இன்னொரு இடத்தில் புல்வெளியில் மான்களும் காட்டெருமைகளும் மேய்ந்து கொண்டிருந்தன. ஓரிடத்தில் ஈசல் புற்றைச் சுற்றி, இரண்டு மூன்று கரடிகள் காலால் துளைத்துக் கொண்டிருந்தன. ஏரியின் நடுவில் வேகமாக விசைப் படகில் போய்க்கொண்டே இவ்வளவையும் பார்ப்பது வேடிக்கையாகத்தான் இருந்தது.

திடுதிப்பென்று ‘மோட்டார் டைனமோ’வின் டபடபவென்ற ஓசை நின்றது. படகு நிலை தடுமாறி வேகமாக அதிர்ந்து ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு நின்றது.

“என்னப்பா? என்ன? ஏன் ‘டைனமோ’ நின்றுவிட்டது?” பரமசிவம் பதறிப் போய்க் கேட்டார். டிரைவர் உதட்டைப் பிதுக்கினான். “மோட்டாரிலே ஏதோ சிறு கோளாறு போல் இருக்குது.அதனாலே ‘பெட்ரோல்’ எடுக்கமாட்டேன் என்கிறதுங்க”

“ஐயையோ! இந்த நட்ட நடு ஏரியிலே ஏழெட்டு மைல் வந்தப்புறம் இப்ப என்னப்பா செய்கிறது?”

“வேறென்ன செய்யலாம்? ஆபத்துக்கு ஆகட்டும் என்று படகுக்குள்ளே கைத் துடுப்புக்கள் கொண்டு வந்திருக்கோமே, அதை எடுத்துத் தள்ளவேண்டியதுதான்.”

“இனிமேல் மோட்டார் ‘ஒர்க்’ பண்ணாதா?”

“‘மைனர் ரிப்பேர்’தான்! அதை முடிச்சிட்டா ஓடும். இங்கேயே கரையோரத்தில், படகைத் தள்ளி மோட்டாரைக் கழற்றி ரிப்பேரை முடிச்சா நல்லதுதான். ஆனால் கரையோரத்திலே மிருகங்கள் பழகற நேரம் இப்போது அங்கே படகை ஒதுக்கறதே தப்பாச்சுங்களே?”

“பரவாயில்லை! சீக்கிரமா முடித்துக்கொண்டு புறப்பட்டு விடுவோம். கையாலே துடுப்புத் தள்ளி எந்த ஜன்மத்தில் கரைக்குப் போகிறது. அது முடியாது. வா! வா! இப்படியே ஒதுக்கி மோட்டாரைக் கழற்று.” - பரமசிவம் டிரைவரை நோக்கிக் கூறினார்.

“வேண்டாமுங்க! இந்த நேரத்திலே கரையோரத்திலே படகை ஒதுக்கறது ஆபத்து.”

“அட! சரிதான், சொன்னாக் கேளப்பா!”பரமசிவத்தின் பிடிவாதத்தினால் அந்தப் பயங்கரமான மிருகங்கள் பழகும் கரையோரத்தில், கைத் துடுப்புக்களால் படகை ஒதுக்கினான் அவன்.படகிலிருந்து மோட்டார் டைனமோ தனியே கழற்றப் பெற்றது.

படகு அலைந்து நீரில் நடுப் பகுதிக்குப் போய்விடக் கூடாதே என்பதற்காக, அதைத் துடுப்புக்களால் முட்டுக்கொடுத்து இழுத்து அணைவாகப் பிடித்துக் கொள்ளவேண்டியிருந்தது. எங்கள் மூவரில் அதிகக் கனமாக, வளமான உடல்பெற்றவர் பரமசிவம்தான். அவர் பிடித்துக் கொண்டால்தான் படகும் ஓடாமல் நிற்கும். நாங்கள் கொத்தவரங்காய் மாதிரி ஒல்லியானவர்கள். எனவே, பரமசிவம்