பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/577

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————————

முதல் தொகுதி / மங்கியதோர் நிலவினிலே575

படகை இழுத்துக் கரையோரமாகப் பிடித்துக் கொண்டார். நானும் டிரைவருமாக டைனமோவை மோட்டாரோடு கழற்றிக் கரைக்குக் கொண்டு போனோம்.

கரையருகே அடர்ந்து செறிந்த புதர். புலி, கரடி எது வேண்டுமானாலும் அந்தப் புதருக்குள் இருக்கலாம். எனக்கு ஒரே நடுக்கம். டிரைவருக்கு என்னைவிட நடுக்கம். ஒருவருக்கொருவர் நடுக்கத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், மகா தைரியசாலி களைப்போல நடித்துக்கொண்டு, “மோட்டார் டைனமோ”வைப் பிரித்தோம். மங்கிய நிலாவின் ஒளி கரையில் சரியாக விழவில்லை. டிரைவர் பையிலிருந்த தீப்பெட்டியை எடுத்து ஒவ்வொரு குச்சியாகக் கிழித்து ஒளி உண்டாக்கிக் கொண்டே, ‘ரிப்பேரை’ச் செய்யலானான். நான் அவனுக்கு ஒத்தாசையாக அருகில் இருந்தேன். இப்படியாக ‘மோட்டார் டைனமோ ரிப்பேர்’ நடந்துகொண்டிருந்தது.

அநேகமாக வேலை முடிந்துவிட்டது. கிளம்ப வேண்டியதுதான். நாசமாய்ப் போகிற விதி. அந்தச் சமயம் பார்த்து எங்களைச் சோதித்துவிட்டது.

திடீரென்று நாங்கள் சற்றும் எதிர்பாராத விதமாகப் புதரில் சலசலப்பு உண்டாயிற்று. அடுத்த விநாடி அந்தச் சாதாரணமான சலசலப்பு, காடே அதிரும்படியான ஒரு கர்ஜனையாக மாறிற்று. எங்களுக்கு இரத்தம் உறைந்துவிட்டது. எனக்கும் சரி, டிரைவருக்கும் சரி, ஒடுவதற்குக் கால் எழும்பவில்லை! புதருக்குள் சலசலப்பு அதிகமாயிற்று.

“வாருங்கள்! வாருங்கள், படகுக்கு ஓடிவிடுவோம். ஐயோ புலி நரவாடையைக் கண்டுகொண்டு விட்டது. இனி விடாது...” டிரைவர் தன்னைச் சமாளித்துக் கொண்டு, என் கையைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துக்கொண்டு கரைக்கு ஓடினான்.

ஆனால், கரையில் படகுமில்லை. படகை இழுத்துப் பிடித்துக்கொண்டு நின்ற பரமசிவமும் இல்லை. நடுத் தண்ணிரிலே படகில் துடுப்பைப் போட்டுத் தள்ளிக்கொண்டிருந்தார். எங்கள் இருவர் உயிர் போனாலும் பரவாயில்லை; தம் ஒருவருடைய உயிர் பிழைத்தால் போதும் என்று கிளம்பி விட்டார் அவர்.

“அட் கொலைகாரப் பாவீ உன் உயிர்தான் உனக்குப் பெரிசா?” - டிரைவர் இரைந்து அலறினான். பரமசிவம் திரும்பிப் பார்க்கவேயில்லை. துடுப்பை வேகமாக வலித்து, நடு ஏரிக்கு ஒடிக் கொண்டிருந்தார், புலியின் உறுமல் எங்களை மிக அருகில் நெருங்கிவிட்டது;

“சாமீ! நீச்சுத் தெரியுமா உங்களுக்கு? குதியுங்க, தண்ணீரிலே! இல்லைன்னா இன்னிக்கு நம்ம ரெண்டு பேரும் புலிக்குப்பலியாக வேண்டியதுதான்!”

“ஐயையோ எனக்கு நீச்சுத் தெரியாதே”

“பரவாயில்லை! இதோ.. என் இடது கையைப் பிடிச்சுக்குங்க” - என்னையும் இழுத்துக்கொண்டு குபிரென்று தண்ணீரில் பாய்ந்துவிட்டான் டிரைவர். நீரில் குதித்து, என்னையும் இழுத்துக்கொண்டு நீந்திய அவன், வேகமாக நீர் நடுவிலிருந்த ஒரு மரத்தைப் போய்த்தொத்திக் கொண்டான். நானும் தொத்திக்கொண்டேன். இருவரும்