பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/579

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77. கருநாக்கு

ங்குனி, சித்திரை மாதங்களில் மதுரையில் திருவிழாக்கள் அதிகம். திருவிழாக்களை விட வெயில் கொடுமை இன்னும் அதிகம். இந்த வெயிலின் தீட்சண்யத்தைக் கோடைக்கானலுக்கு டிக்கெட் வாங்க ‘கியூ’வில் நிற்பவர்கள் தான் அறிவார்கள்.

அன்று நான் அப்படித்தான் கோடைக்கானலுக்கு டிக்கெட் கிடைக்காமல் ‘புக்கிங் ரூம்’ என்ற லட்சியத்தை நோக்கி, ‘கியூ’ என்னும் சாதனம் கொண்டு, வெயில் என்னும் புலனை அடக்கித் தவம் செய்துகொண்டிருந்தேன். தவம் என் சொந்த முயற்சியால் சித்திப்பதற்கு முன்னால், ஒரு நண்பரால் அதிசீக்கிரமாகச் சித்தித்து விட்டது.

என் நண்பர் பட்டாபி நாராயணன் கோடைக்கானல் ஹில் போலீஸ் ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்து வருபவர். அன்று தற்செயலாக, ஆபீஸ் காரிய நிமித்தம் மதுரைக்கு வந்திருக்கிறார். நான் கோடைக்கானலுக்கு வருவது பற்றி, நேற்றே அவருக்குக் கடிதம் கூட எழுதியிருந்தேன். ஆனால், அவர் இன்று இங்கே வந்திருப்பதால், கடிதத்தைப் பார்த்திருக்க நியாயமில்லை. ஆபீஸ் காரியம் முடிந்து ஊர் திரும்புவதற்காக அவர் ஸ்டாண்டை அடைந்த போதுதான் ‘கியூ’வில் நின்று கொண்டிருந்த என்னை அவர் காண நேரிட்டது.

அவருடைய தயவினால் டிக்கெட்டும் சுலபமாகக் கிடைத்தது. பஸ்ஸில் டிரைவருக்கு அடுத்தபடி இருந்த முன் சீட்டில் இருவரும் ஏறி அமர்ந்து கொண்டோம். மலைப் பிரயாணத்திற்கு வாய்க்கும் பாக்கியங்களில் எல்லாம் சிறந்த பாக்கியம், இந்த முன் ஆசனத்தில் அமரும் பாக்கியம்தான். உடம்பு நோகாமல், பஸ்ஸின் அலுங்கல், குலுங்கல்களுக்கு ஆளாகாமல், இருபுறமுள்ள இயற்கை வனப்புகளையும் ரசித்துக் கொண்டு போகலாம். .

ஆனால், எங்கள் துரதிர்ஷ்டத்தை என்னவென்று சொல்வது? மதுரையிலிருந்து புறப்பட்ட பஸ், சோழவந்தானுக்கும் வத்தலக்குண்டுக்கும் நடுவில் ஒரு சிறு கிராமத்தின் அருகில் மெஷினில் கோளாறாகி நின்று விட்டது.

சோழவந்தானில் பஸ் நின்ற போது, மதுரையிலிருந்து வந்த சக பிரயாணி ஒருவர் காப்பி சாப்பிட இறங்கினார். பஸ் புறப்படவேண்டிய நேரமாகியும், அவர் ஹோட்டலிலிருந்து வந்து ஏறிக் கொள்கிற வழியாகக் காணோம். எல்லாப் பிரயாணிகளும் வந்தாகி விட்டது. டிரைவர் ஆசனத்தில் வந்து அமர்ந்து கொண்டு ‘ஹார்ன்’ அடித்துப் பார்த்தார். என்ன செய்தும், ஹோட்டலில் நுழைந்த பேர்வழி
நா.பா. I - 37