பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



பழகப் பழக எண்ணங்கள் நெருங்கி விடுகின்றன. பயம் குறைந்து விடுகிறது. வெட்கம், நாணம் சங்கோஜம், எல்லாம் மாறிவிடுகின்றன. ஆரம்பத்தில் எந்த இடது கையின் ‘ஊனம்’ உனக்குத் தெரியக்கூடாதென்று மறைத்தேனோ, அந்த நொண்டிக் கையை மேல் துண்டால் மறைப்பதையே விட்டுவிட்டேன். முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கமுடியுமா? மறைத்துதான் ஆகப் போவதென்ன?

என்னிடம் நாதம் இருக்கிறது. அதிசயமான சங்கீதக் கலையை உபாசித்து வருகிறேன். அதைக் கற்றுக்கொள்வதற்காகத்தானே நீ வந்தாய்? என் கைகளும் கால்களும் சாமுத்திரிகா லட்சணத்தோடு இருக்க வேண்டுமென்பதைப் பரிசோதிப்பதற்காக நீ வரவில்லையே? இப்போதெல்லாம் மேல் துண்டே போட்டுக் கொள்ளாமல் திறந்த மார்போடுதான்பாட்டுச் சொல்லிக் கொடுக்கிறேன். இடது கை ஊனம்; முழங்கைக்குக் கீழே ஒன்றுமில்லாத சூன்யம்; சூம்பிப் போன நீண்ட வெள்ளரிக்காய் மாதிரி; அதை நீ சதா பார்ப்பது போலவும், பார்க்காதது போலவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாய்! அதுவும் எனக்குத் தெரியும்!

நான் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உன்னைப் பற்றிக் கவலைப்பட்டிருக்கிறேன். உன் அழகை நினைத்து ஏங்கியிருக்கிறேன். பொய்யில்லை. உண்மையாகத்தான். உன் இனிய குரலை நினைத்து, அந்தக் குரலுக்குக் கலை வரம்பு கட்டிக் கொடுக்கும் குருவாக நான் அமைந்ததை எண்ணி, உள்ளுறப் பெருமிதப் பட்டிருக்கிறேன். இதெல்லாம் வாஸ்தவம்.

ஆனால், மாலா! நீ ஒரு அழகான யுவதி.நான்...நான்...நான்? அழகு முகத்தில் மட்டும் இருப்பதானால் உன்னைப் போலவே அழகன்தான்! கை முடமான அழகன்! கை முடமானவனை யாராவது அழகனென்று ஒப்புக்கொள்வார்களா?

எப்படித்தான் எனக்கு அவ்வளவுதுணிவு வந்ததோ? ஸ்வரங்களை வரிசைப்படுத்தி எழுதிக் கொள்வதற்காகவும் புதிய பாட்டுக்களைக் குறித்துக் கொள்வதற்காகவும் நீ ஒரு கனத்த நோட்டுப்புத்தகம் கொண்டு வருவாய். அன்று மறந்து போய் அந்த நோட்டுப் புத்தகத்தை என் அறையிலேயே விட்டு விட்டுப் போய்விட்டாய்.

என் உள்ளத்தின் ஊமைக் கனவுகள், அனுராகச் சிந்தனைகள் இவைகளுக்கெல்லாம் அன்றைக்கு ஏன்தான் அவ்வளவு வெறி பிடித்தனவோ? அந்த நோட்டுப் புத்தகத்தை எடுத்தேன்! என் நெஞ்சத்தின் குமுறல்களை எல்லாம் எழுத்தாக்கினேன். மறுநாள் வழக்கம்போல நீ வந்தாய் பாடம் முடிந்தது.நீவீட்டிற்குப் போகும்போது ஒன்றும் தெரியாதவனைப் போல நடித்துக் கொண்டு என் ஆசைகளையெல்லாம் கொட்டி மெழுகியிருக்கும் அந்த நோட்டுப் புத்தகத்தை உன்னிடம் கொடுத்தேன்.

“மாலா! நேற்று இதை மறந்து போய் வைத்துவிட்டுப் போய் விட்டாயே? இந்தா இதில் கடைசிப் பக்கத்தில் புதிய ‘பாட்டு’ ஒன்று எழுதியிருக்கிறேன். வீட்டுக்குப் போனதும் தனியாக உட்கார்ந்த பிரித்துப் பார்.”