பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/581

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————————

முதல் தொகுதி / கருநாக்கு 579


யிரத்துத் தொளாயிரத்துப் பதினோறாம் வருடம். அப்போதுதான் என்னை முதன் முதலாக மதுரையிலிருந்து கோடைக்கானல் ரூரல் ஸ்டேஷனுக்கு மாற்றியிருந்தார்கள். சுதந்திரப் போராட்டம் மும்முரமாக நடந்துகொண்டிருந்த சந்தர்ப்பம் அது. திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையை மணியாச்சி ஜங்ஷனில் செங்கோட்டை வாஞ்சி ஐயர் சுட்டுக்கொன்ற பயங்கர சம்பவம் நடந்து கொஞ்ச நாள்தான் ஆகியிருந்தது. இந்தச் சம்பவத்தால் பெரிய பெரிய உத்தியோகங்களில் இருந்த வெள்ளைக்காரத் துரைகள் எல்லாம் போலீஸ் பாதுகாப்பை அதிகமாக நாடினர். மதுரை ஜில்லா முழுவதும் சுதந்திரப் போராட்டம் உச்ச நிலைமை அடைந்திருந்த சமயத்தில், கோடைக்கானலுக்கு மாற்றல் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்திருந்தேன் நான். பொழுதை அமைதியாகக் கழிக்கலாம் அல்லவா?

ஆனால், கோடைக்கானலுக்கு வந்து பதவி ஏற்றுக்கொண்ட பிறகுதான், ‘வேலை எனக்கு அங்கும் குறைவில்லை’ என்று தெரிந்தது. அந்தச் சமயம் இந்தப் போராட்டத்துக்குப் பயந்தே ஜில்லாக் கலெக்டர், சப்-கலெக்டர் ஆகிய இரண்டு வெள்ளைக்காரத்துரைகளும் கோடைக்கானலுக்கு வந்து முகாம் போட்டிருந்தார்கள். அவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டிய வேலை வேறு என் தலையில் சுமந்திருந்தது. கலெக்டர் துரைகளின் முகாமை அறிந்து புரட்சிக்காரர்களும் வேட்டைக்கு வருவார்கள் என்ற ஹேஷ்ய பூர்வமான செய்தி கிடைத்திருந்ததனால், நான் சர்வ ஜாக்கிரதையாக இருக்கவேண்டி வந்தது. இப்படியிருக்கும்போதுதான், ஒரு நாள் முன்னிரவில் அந்தப் பயங்கர சம்பவம் நடந்தது.

மாலை சுமார் ஆறரை மணி இருக்கும். கோடைக்கானலில் சில சமயங்களில் மூன்று மணிக்கே இரவைப்போல ஆகிவிடும். அன்றோ, மழை இருட்டு.

அன்று ஓர் விசேஷச் செய்தி கிடைத்திருந்ததனால், நான் அந்தச் செய்தியை ஊர்ஜிதப் படுத்துவதற்குரிய தகவலை ஓர் ஆள் மூலம் எதிர்பார்த்து, ஸ்டேஷன் வராந்தாவில் நாற்காலியைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தேன். எதிரே அமைதியாகத் தென்பட்ட ஏரியில் அவ்வளவு இருட்டையும் பனியையும் பொருட்படுத்தாமல் யாரோ பாட்டரி விளக்குகளின் வெளிச்சத்தோடு படகுகளில் போய் வந்து கொண்டுதான் இருந்தார்கள்.

மணி ஏழேகால் ஆகிவிட்டது. ஏரியில் படகுகளின் ஒலியையும் குமுறும் இடியோசையையும் தவிர கோடைக்கானல் ஊர் அடங்கிவிட்டது. விநாடிக்கு விநாடி பனி கோரமாகிக் கொண்டிருந்தது. நான் எதிர்பார்த்த ஆள் இன்னும் வரவில்லை.

விஷயம் இதுதான் கலெக்டர் துரை எதற்காகப் பயந்து கொண்டுகோடைக் கானலில் ‘ஸ்பெஷல் போலீஸ்’ பாதுகாப்புடன் முகாம் போட்டிருந்தாரோ, அதுவே அங்கே அவரைத் துரத்திக் கொண்டு வந்திருக்கிறது என்று எனக்கு உளவு கிடைத்தது. கோடைக்கானல் மலைத்தொடரின் அடிவாரத்தில் பண்ணைக்காடு என்று ஒரு ஊர் இருக்கிறது பாருங்கள், அந்த ஊரில் ‘பேயாண்டி அம்பலம்’ என்ற ஒரு தீவிர தேச பக்தரும், மதுரையைச் சேர்ந்த வேறு சில தேசியப் புரட்சிக்காரர்களும் சேர்ந்து