பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/582

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

580நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————

‘கலெக்டர் துரை’யைக் கொலை செய்துவிடுவதுபற்றிப் பேசுவதற்கு அன்று நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு ஒரு சதிக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்தக் கூட்டம் பண்ணைக்காடு ஊரில் மேல்புறம், சாலையோரமாக இருக்கும் பேயாண்டி அம்பலத்தின் கொடிக்காலுக்குள்ளே நடைபெறப் போகிறது. சதியில் சம்பந்தப்பட்ட வர்களை அன்றிரவே கைது செய்யத்தவறினால், பின்னர் கலெக்டர் உயிர் பிழைப்பது துர்லபம். அவ்வளவு குரூரமான சதி”

இந்தத் தகவல் அன்று மாலை நாலு மணிக்குத்தான் எனக்குத் தெரிந்தது. விஷயம் மெய்தானா என்று அறிந்து வர நம்பிக்கை வாய்ந்த ஒரு கான்ஸ்டபிளைச் சாதாரண உடையில் பண்ணைக் காட்டிற்கு உடனே அனுப்பியிருந்தேன். அவன்தான் இன்னும் திரும்பி வரவில்லை. முதலில் எனக்குத் தகவல் தெரிவித்தவரும் அதே பண்ணைக்காடு ஊரைச் சேர்ந்தவர்தாம்.ஆனால், தகவல் கடித மூலமாக வந்திருந்தது.ஆகவே, எனக்குச் சிறிது சந்தேகமும் இருந்தது. இதனால் எனக்குக் கடிதம் அனுப்பிய ‘நடராஜ அம்பலம்’ என்பவரையும் கையோடு கோடைக்கானலுக்குக் கூட்டிக்கொண்டு வருமாறு கான்ஸ்டபிளிடம் வற்புறுத்திச் சொல்லி அனுப்பியிருந்தேன்.

ரியாக எட்டு மணிக்கு நான் அனுப்பியிருந்த கான்ஸ்டபிளும், எனக்குக் கடிதம் எழுதியிருந்தவரான பண்ணைக்காடு நடராஜ அம்பலமும் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தார்கள்.

இருவரையும் தனித்தனியே விசாரித்ததில், அன்றிரவு பேயாண்டி அம்பலத்தின் கொடிக்காலில் புரட்சியாளர்களின் பூர்வாங்கச் சதிக் கூட்டம் நடக்கப்போவது உண்மைதான் என்று உறுதியாகத் தெரிந்தது. நான் உடனே ஆயுதம் தாங்கிய போலீஸ் படையுடன் லாரியில் பண்ணைக் காட்டிற்குப் புறப்படுவதற்கான ஏற்பாடுகளைத் துரிதமாகச் செய்யலானேன்.

அப்போது நடராஜ அம்பலம் சிறிது தயக்கமும் பயமும் நிறைந்த குரலில் என் அருகே வந்து, “இன்ஸ்பெக்டர் ஐயா! இந்தச் சதிக் கூட்டத்திலேயே நாம் அதிகமாகப் பயப்பட வேண்டிய ஆள் ஒருவர்தான். அந்த மனிதர் வாயிலே விழுந்தால் பெரிய தொல்லைதான். கருநாக்குக்கார மனிதர். இந்தச் சதிக் கூட்டத்திலே எங்களூர்ப் பேயாண்டி உள்பட மொத்தம் எட்டுப் பேருங்க. இந்த எட்டுப் பேரிலே வேம்பத்துர் ஆசுகவி நம்பிராஜ ஐயரும் ஒருத்தர். பெரிய மாந்திரீக பரம்பரையிலே வந்தவருங்க. எடுத்தெறிந்து துக்கிரித்தனமா ‘பட்னு’ ஒரு வார்த்தை சொல்லிவிட்டார்னா, அதிசீக்கிரமாகப் பலித்துவிடுகிறது.”

“சட்! நிறுத்தும் ஐயா, பேச்சை இன்றிரவு பன்னிரண்டு மணிக்குப் பேயாண்டி அம்பலம் வெற்றிலைக் கொடிக்காலில் கலெக்டர் துரையைக் கொல்வதற்குச் சதிக்கூட்டம் நடக்க போகிறதா, இல்லையா? அதுதான் எனக்குத் தெரியவேண்டும். ‘வேம்பத்துார் நம்பிராஜ ஐயர் கருநாக்குக்காரர்’, ‘வாக்குச் சக்தி பொல்லாதது’ என்று எல்லாம் சுத்த ‘ஹம்பக்’ பண்ணாதேயும்... போலீஸ் ‘டிபார்ட்மெண்டு’க்குக் குற்றவாளியின் சாமர்த்தியத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேணுமென்கின்ற