பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/584

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

582நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————


தகரக் கொட்டகையின் நடுவே ஒரு பெரிய அரிக்கேன் லாந்தர் எரிந்து கொண்டிருந்தது. அந்த அரிக்கேன் லாந்தரைச் சுற்றி ஏழெட்டு மனிதர்கள் உட்கார்ந்திருந்தனர். அநேகமாக ஒரே ஒருவர் தவிர, மற்றவர்கள் எல்லாம் கதர்க் குல்லாய் வைத்திருந்தனர். அந்த ஒருவர் நெற்றியில் மட்டும், சந்தனமும் குங்குமமுமாகக் காலனா அகலத்துக்கு ஒரு பொட்டு. சோழியர்கள் மாதிரி முன் புறம் முடிந்த குடுமி. பஞ்சக்கச்சம் வைத்துக் கட்டிக் கொண்டிருந்தார். கம்பீரமான ஆகிருதி.

“அவர்தானுங்க நம்பிராஜ ஐயர்!” நடராஜ அம்பலம் பீதி தொனிக்கும் குரலில் என் காதருகே மெல்ல முணுமுணுத்தார்.

அரிக்கேன் லாந்தரின் மங்கிய ஒளியில், அவர்களுக்கு நடுவே தரையில் நாலைந்து கைத் துப்பாக்கிகள் கிடப்பதைப் பார்த்தேன். உட்கார்ந்து கொண்டிருந்த ஆட்களில் கிருதா மீசையும் முரட்டுத்தோற்றமும் உடைய ஒருவர் எழுந்திருந்து, கீழே கிடந்த துப்பாக்கிகளில் ஒன்றை எடுத்து, அதை எப்படி உபயோகப்படுத்துவது என்று விளக்கத் தொடங்கினார்.

“இவர்தானுங்க எங்க ஊர் பேயாண்டி அம்பலம். துப்பாக்கி சுடறதிலே நல்ல பழக்கமுள்ளவருங்க” மீண்டும் என் செவியில் நடராஜ அம்பலத்தின் நடுங்கிய குரல் மெல்ல விழுந்தது.

துப்பாக்கியைக் கையில் எடுத்துக் கொண்டிருந்த ஆள், “வந்தே மாதரம்! பாரதமாதாவுக்கு” என்று கோஷம் கொடுத்துவிட்டு, “சகோதரர்களே! இதோ மாதிரிக்கு ஒரு முறை சுட்டுக் காட்டுகிறேன். எல்லாரும் நன்றாகக் கவனித்துக்கொள்ளுங்கள்” என்று கூறித் துப்பாக்கியை மேலே தூக்கிச் சுழற்றி மனத்துக்குத் தோன்றிய திசையில் குறி வைத்துக் குதிரையை அழுத்தினார். உட்கார்ந்திருந்தவர்கள் எல்லாரும் எழுந்திருந்து நின்றதால், பேயாண்டி அம்பலம் குறிவைத்த திசை எனக்குத் தெரியவில்லை.

ஆனால், அவர் அப்படிக் குதிரையை அமுக்கிக் கொண்டிருந்தபோது முன் குடுமியோடு இருந்த ஆள்-நம்பிராஜ ஐயர் கணீரென்ற குரலில் கூறிய சொற்கள், என் உடம்பு புல்லரித்து நடுங்கும்படி செய்தன.

“பேயாண்டி! நீ இப்போது சுடுகின்ற குண்டுகள் காட்டிக் கொடுக்கும் துரோகி ஒருவனின் வலது புஜத்துக்கு யமனாகப் போகின்றன என்று என் மனத்தில் பகவதி சொல்கிறாள். அப்பா” நின்றவர்களின் நிழல், விளக்கு ஒளியை மறைத்து விட்டது. குதிரை அழுத்தப்பட்டது. குண்டுகள் படீரென்று வெடிக்கும் ஓசை! ஆனால் இதென்ன? ஐயோ! என் பக்கத்தில் பதுங்கிக் கொண்டிருந்த நடராஜ அம்பலம் அல்லவா பயங்கரமாக அலறிக்கொண்டு கீழே சாய்கிறார்!

என் உடம்பு நடுங்கியது. சட்டென்று விஸிலை எடுத்து இரைந்து ஊதினேன். போலீஸார் ‘தடதட’ வென்று ஓடிவரும் ஓசை கேட்டது. பக்கத்தில் விழுந்து கிடந்த நடராஜ அம்பலத்தைக் கீழே குனிந்து பார்த்தேன். அவர் வலது புஜத்தில் துப்பாக்கிக்