பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/585

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————————

முதல் தொகுதி / கருநாக்கு 583

குண்டுகள் பாய்ந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அதிர்ச்சியில் பிரக்ஞை இழந்திருந்தார் அவர்.

இதற்குள் நம்பிராஜ ஐயர், “வந்தே மாதரம் ஓடுங்கள், ஓடுங்கள், போலீஸ் துரத்துகிறது” என்று இரைந்து கூறுவதையும், அதை அடுத்துக் கதர்க் குல்லாய்காரர்கள் திசைக்கொருவராக ஒடுவதையும் கண்டேன். போலீஸ்காரர்கள் அப்போதுதான் தகரக் கொட்டகையை நெருங்கியிருந்தார்கள்.

கடைசியில், நம்பிராஜ ஐயரும், பேயாண்டி அம்பலமும் எங்களிடம் சிக்கிக்கொண்டார்கள்! லைசென்ஸ் இல்லாத அந்தத் துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன. தகரக் கொட்டகையில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் பேயாண்டிக்குக் கைகளில் விலங்கு மாட்டிக்கொண்டிருந்தார்கள். அடுத்தாற்போல, நம்பிராஜ ஐயருக்கு மாட்டவேண்டும்.

இந்த நிலையில் நம்பிராஜ ஐயர் திடீரென்று நாலடி முன்னால் நடந்து என் அருகே வந்து விறைப்பாக நின்றுகொண்டு, என்னை ஏற இறங்க ஒருமுறை பார்த்துவிட்டுக் கூறினார்: “ஓய் இன்ஸ்பெக்டரே! உம்முடைய கம்பளிக் கோட்டை உடனே கழற்றிக் கீழே வையும் ஐயா! இல்லையானால், இன்னும் சில நிமிஷத்தில் சாகப் போகிறீர்!”

“இந்தாரும், நம்பிராஜ ஐயரே! உம்முடைய மாந்திரீகம், வாக்கு சக்தி, கருநாக்கு இதெல்லாம் எங்கிட்டே செல்லாது. சும்மா எதையாவது பிதற்றாதேயும்” என்றேன் நான்.

"நான் பிதற்றவில்லை. பகவதி சொல்கிறாள். சற்றுமுன் நீர் புதருக்குள் ஒளிந்திருந்தபோது, உமக்குத் தெரியாமலே ஒரு விஷஜந்து உம்முடைய கோட்டுப் பையைத் தனது தற்காலிக வாசஸ்தலமாக ஸ்வீகரித்துக் கொண்டிருக்கிறது.என் நாக்கு கருநாக்கு பொய் அதில் பிறக்காது. சந்தேகமாயிருந்தால், இதோ நீரே உம் கண்களால் பாருமேன்!” இப்படிக் கூறிக்கொண்டே நான் எதிர்பாராத விதமாக என்மேல் பாய்ந்து, என் கம்பளிக் கோட்டைக் கழற்றிக் கீழே வீசி அறைவது போல எறிந்தார் நம்பிராஜ ஐயர்.

என்ன ஆச்சரியம் ஒரு பாக நீளத்துக்குப் பளபளவென்று கண்ணைப் பறிக்கும் நிறத்தோடு ஒரு பச்சைப் பாம்பு கோட்டுப்பையிலிருந்து சீறிக்கொண்டு வெளிவந்தது. கான்ஸ்டபிள் ஒருவன் லத்திக் கம்பால் பாம்பை அடித்துக் கொன்றான்.

“என்ன, இன்ஸ்பெக்டர் நம்புகிறீரா?" - நம்பிராஜ ஐயர் சிரித்துக்கொண்டே கேட்டார். நான் அவருக்குப் பதில் சொல்லாமலே கான்ஸ்டபிளை நோக்கி,“இவருக்கு விலங்கு மாட்டு அப்பா” என்றேன். அவன் விலங்கு மாட்டினான். இதற்குள் வலது தோளில் குண்டு பட்டுக் காயமடைந்து கிடந்த நடராஜ அம்பலத்துக்குப் பிரக்ஞை வந்திருந்தது. கைத்தாங்கலாக இரண்டு கான்ஸ்டபிள்கள் அவரை லாரி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்டவர்களோடு நாங்களும்