பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/588

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78. கடுவாய் வளைவு

செங்கோட்டையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் போது, புனலூர் வரையிலும், மலைத் தொடர்களின் நடுவேயும், பள்ளத்தாக்குப் பகுதியிலுமாக இயற்கை வளமிக்கக் காட்சிகளுக்கு ஊடே புகைவண்டி செல்கிறது. இந்த இயற்கைக் காட்சிகளில் மயங்கி விட்டவர்கள், செங்கோட்டையிலிருந்து புனலூர் வரை எத்தனை ஸ்டேஷன்கள் இருக்கின்றன, அவைகளுக்கு என்னென்ன பெயர்கள் என்பதையெல்லாம் மறந்து விடுவதுதான் வழக்கம்!

இந்த வழியில் மலையடிவாரத்துப் பள்ளத்தாக்கில் பள்ள பகவதியாபுரம் என்ற முதல் ஸ்டேஷனை அடுத்து, மலை மேல் உள்ள ஆரியங்காவு என்ற ஸ்டேஷன் இருக்கிறது. இவ்விரண்டு ஸ்டேஷன்களுக்கும் நடுவில் முக்கால் மைல் தொலைவு இருளடைந்த மலைக் குகையினுள்ளேயே புகைவண்டி செல்வதை மட்டும் எவரும் நிச்சயமாக மறந்திருக்க மாட்டார்கள்.

ஆரியங்காவிலுள்ள சாஸ்தா கோவில் செங்கோட்டை, தென்காசிப் பகுதிகளில் பிரசித்தமானது. வரப்பிரசாத சக்தி மிகுந்த தெய்வம் என்று மக்கள் சாஸ்தா கோவிலுக்குச் சென்று வருகிறார்கள்.

குற்றாலத்தில் சீஸனுக்காகப் போய்த் தங்கியிருந்தேன். என்னுடைய செங்கோட்டை நண்பர் சிவனுக் கரையாளரைத் தற்செயலாக அருவிக்கரையில் சந்திக்க நேர்ந்தது.

“குற்றாலம், குற்றாலம் என்று இங்கேயே கிடந்து மடிகிறீர்களே, ஸார் நாளைக்கு ஆரியங்காவு வரையில் போய் விட்டு வரலாமே” என்றார் அவர்.

நான் அதற்கு இணங்கினேன். கரையாளர் நிறைந்த தெய்வ பக்தியுடையவர். தமிழ் நாட்டின் பெருமைக்குக் காரணமான பழம் பண்பாட்டை அழிக்கின்ற எந்தச் செயலையும் துணிந்து வெறுப்பவர். புளியரை, ஆரியங்காவு, பகவதியாபுரம் முதலிய பகுதிகளில், எஸ்டேட் மானேஜராக இருந்தவர். அந்த நாட்களில் வருமானத்தில் ‘நாலு காசு’ மீதம் பிடித்துச் சிறிது சிறிதாக உள்ளூரிலேயே நிலபுலங்களை வாங்கிச் சேர்த்துக் கொண்ட பின், வேலையை விட்டு விட்டார். இவர் சுபாவத்தில் நல்ல மனிதர். மறுநாள் காலை, நானும் சிவனுக்கரையாளரும் செங்கோட்டையிலிருந்து காலை ஒன்பது மணிக்குப் புறப்படும் திருவனந்தபுரம் பாசஞ்ஸரில் ஆரியங்காவுக்குப் போய்ச் சேர்ந்தோம். - -

ஆரியங்காவு ஸ்டேஷனில் இறங்கியதும் நான் பிரமித்துப் போனேன், நாம் தமிழ் நாட்டிலுள்ள ஒரு மலைத் தொடரின் நடுவேதான் இருக்கிறோமா? அல்லது காஷ்மீரில்