பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/590

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

588நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————

அரட்டையடித்துக் கொண்டிருந்தவர்கள், கால் மணிநேரத்திற்கு ஒரு டீ வீதம் பருகிக் கடைக்காரர்கள் ‘நம்பிக்கை’ மோசம் போகாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

கரையாளரை அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும் போலும். கடையில் உட்கார்ந்து, ஊர்வம்பு பேசிக்கொண்டிருந்தவர்கள் அவரைக் கண்டதும் மரியாதையோடு எழுந்திருந்து வணங்கி வரவேற்ற விதத்திலிருந்தே அது தெரிந்தது. கரையாளர் மலையாளத்தில் அவர்களோடு, ஏதோ பேசினார்.

சிறிது நேரத்தில் ஒரு ஜீப் வந்தது. அதை எஸ்டேட் கட்டிடத்திலிருந்து ‘டிரைவ்’ செய்துகொண்டு வந்த மலையாளி, எங்கள் அருகில் கொண்டுவந்து நிறுத்தினான். கரையாளரும் நானும் ஏறிக்கொண்டோம். அவர் அவனிடம் மலையாளத்தில் ஏதோ கூறினார். ஜீப் புறப்பட்டது. ஏற்றமும் இறக்கமுமான மலை ரஸ்தாவில், வானளாவி வளர்ந்திருந்த தேக்கமரங்களின் இடையே குளிர்ந்த காற்று முகத்தில் வந்து மோத, அது ஊர்ந்து சென்றது.

“ஸார்! புலிகளுக்கும் அவைகள் இருக்கின்ற இடத்துக்கும் தானே நீங்கள் பயப்படுகிறீர்கள்? புலிகளைப் பற்றிய கதையைச் சொன்னால்கூட நீங்கள் பயப்படுவீர்களோ?”

சிவனுக்கரையாளர் ஜீப்பில் சென்றுகொண்டிருக்கும் போதே பேச்சைத் தொடங்கினார். கதை என்றால் நானா சும்மா விடுகிறவன்?

“ஏன்? ஏதாவது ‘ரெடிமேடாக’ வைத்திருக்கிறீர்களா? இருந்தால் சொல்லுங்கள்!”

கரையாளர் தமக்கே உரிய அனுபவ பாணியில் கூற ஆரம்பித்தார்.

“‘புலிகளின் கோட்டை’ என்று கூறினேனே ‘கடுவாய் வளைவு’ பிரதேசத்தைப் பற்றி. அந்த இடத்தினிடையேதான் எங்கள் ‘எஸ்டேட் பங்களா’ அமைந்திருந்தது. ‘பிரவிருத்தி’ என்று வந்த பிறகு ஆபத்துள்ள வனாந்தரம் ஆபத்தில்லாத நகர வாழ்வு என்று வித்தியாசம் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? எங்காவது வாழ்ந்துதானே ஆக வேண்டியிருக்கிறது?

பங்களாவைச் சுற்றி ஆழமான குழி வெட்டியிருந்தார்கள். கதவுகள் எல்லாம் இரும்பால் அமைக்கப்பட்டிருந்தன. ஜன்னல்களை உயரமாகத் தரைக்கெட்டாமல் வைத்திருந்தார்கள். இரண்டு மூன்று துப்பாக்கிகளும் பங்களாவில் இருந்தன. இவ்வளவு தற்காப்புச் சாதனங்களையும் நம்பித்தான், நானும் குடும்பத்தோடு அந்தப் பங்களாவில் வசிப்பதற்குச் சம்மதித்தேன்.

ஆனால், இவர்கள் கொடுத்திருந்த இந்த ஆயுதங்களை எல்லாம்விட உன்னதமான ஓர் ஆயுதம் என்னிடம் இருந்தது. அது கடவுளால் எனக்குக் கொடுக்கப்பட்டது. அதுதான் என் சொந்த மனோதைரியம்.

மாலை ஐந்தரை மணி ஆகிவிட்டால்,என்ன தலைபோகிற காரியம் இருந்தாலும், விடிந்து பத்து மணியாவதற்கு முன்பும் மாலை ஐந்தரை மணிக்குப் பின்பும் பங்களா