பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/591

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————————

முதல் தொகுதி / கடுவாய் வளைவு 589

வாசலைக் கடந்து செல்வதில்லை; செல்லக் கூடாது. கண்டிப்பாக இதை அமுல் நடத்தினோம்.

எஸ்டேட் காரியமாகக் கொல்லம், புனலூர், கொட்டாரக்கரை என்று நான் வெளியூர்களுக்கு அடிக்கடி போய் வரவேண்டியிருக்கும். சில சமயங்களில் இரவு ரெயிலில் ஊருக்குத் திரும்புவேன். ஆனால், அப்படித் திரும்புகிற நாட்களில் ஆரியங்காவு ஸ்டேஷனிலேயே இறங்கிப் படுத்துக் கொள்வேனே தவிர, இரவில் மலை வழியாக எஸ்டேட் பங்களாவுக்குப் போகமாட்டேன். விடிந்த பிறகு பத்து மணிக்கு மேல்தான் போவேன். இந்த வழக்கத்துக்குச் சோதனைபோல் ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது.

அப்போது இங்கே மழை சீஸன், கைவசமிருந்த, உலர்த்திப் பாடம் செய்யப்பட்ட தேயிலையை மேலும் வைத்துக் கொண்டிருந்தால் கெட்டுப் போய்விடும். எப்படியாவது மொத்த விற்பனைக்கு ஒப்பந்தம் செய்து கொண்டுதான் திரும்பவேண்டும் என்று நான் வெளியூர்ச் சுற்றுப் பிரயாணத்தை மேற்கொண்டிருந்தேன்.

ஐந்தாறு நாட்களாக வெளியூர்களில் சுற்றினேன். கடைசியில் கொல்லத்திலுள்ள ‘ஸோல் ஏஜண்ட்’ ஒருவர் அகப்பட்டார். மறுநாள் எழுத்து மூலம் அவரிடம் உடன்படிக்கை செய்துகொண்டு, ஊர் திரும்பலாம் என்று இருந்தேன் நான்.

ஆனால், என்னுடைய துரதிஷ்டமோ, என்னவோ; அன்று மாலையே ஊருக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. ஊரிலிருந்து என் மனைவி தந்தியடித்திருந்தாள்.

“குழந்தை பகவதிக்கு மலேரியாக் காய்ச்சல் அபாயம், உடனே வரவும்.”

உடன்படிக்கையைத் தபால் மூலம் செய்து கொள்ளலாம் என்றெண்ணித் தந்தி கிடைத்த உடனே ரெயிலேறி விட்டேன். குழந்தையின் காய்ச்சல் தீர்ந்து நல்லபடி ஆக வேண்டுமே என்ற பிராத்தனையைத் தவிர, என் மனம் வேறெதையுமே அப்பொழுது நினைக்கவில்லை. ‘குழந்தையின் உயிருக்கே நாம் போவதற்குள் ஆபத்து நேர்ந்து விடுமோ?’ என்ற ஒரு பயமும் மனத்தில் எழுந்து குழப்பிக்கொண்டிருந்தது.

ஆரியங்காவு ஸ்டேஷனில் நான் இறங்கும்போது இரவு மணி ஏழேகால் நல்ல நிலாக் காலமானாலும், மழைமேகம் இருளாகக் கப்பி வான வெளியை மூடியிருந்தது. ‘இஇ’ என்ற ஓசையைத் தவிர நிசப்தமும், இருட்டும் குடிகொண்டிருந்தன. சாதாரணமாக நான் ஊருக்குத் திரும்பியிருந்தால் அப்படியே ஸ்டேஷன் ‘வெயிட்டிங் ரூமி’ல் படுத்துக் கொண்டிருந்து விட்டுக் காலையில்தான் போவேன்.

ஆனால், அன்றோ குழந்தை பகவதியின் மலேரியாக் காய்ச்சல் என்னைத் துடிதுடிக்கச் செய்துகொண்டிருந்தது. ‘என்ன ஆனாலும் சரி; இப்போதே கடுவாய் வளைவுக்குப் போய் எஸ்டேட் பங்களாவை அடைந்துவிடுவது’ என்று தீர்மானித்துக்கொண்டேன்.- - х .

அதிருஷ்டவசமாக, என் கைப் பையில் ‘மூன்று ஸெல் டார்ச் லைட்’ ஒன்று இருந்தது. வெளியூர்களுக்குச் செல்லும்போது, அதை நான் கையோடு கொண்டுபோவது வழக்கம்.