பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/592

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

590நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————


மனத்தைத் திடப்படுத்திக் கொண்டேன். உடலையும் உயிரையும் சர்வத்தையும் விதிகளின் கைகளில் ஒப்படைத்து விட்டதாக எண்ணிக்கொண்டு, ‘கடுவாய் வளைவு’க்குச் செல்லும் மலை ரஸ்தாவில் நடந்தேன்.

மனம் என்னவோ,நான் தைரியமாகக் காலை எட்டிவைத்து வேகமாய் நடப்பதாக எண்ணிக்கொண்டிருந்தது! ஆனால், உண்மையில் கால்களின் நடையில் ஒரு நடுக்கம், ஒரு தயக்கம் இருப்பதை நானே உணரமுடிந்தது. தேள் என்று தெரிந்துகொண்டே அதன் கொடுக்கைத் தடவிப் பார்ப்பது போலிருந்தது என் செயல். இதை நீங்கள் அசட்டுத் துணிச்சல் என்பீர்களோ, அல்லது பாராட்டவேண்டிய தைரியம் என்பீர்களோ எனக்குத் தெரியாது.

‘படக் படக்’ என்று கொள்ளை போகிறாற்போல் அடித்துக் கொள்ளும் மனமும், நடக்கத் தயங்கிக் கொண்டே நடக்கும் கால்களுமாக நான் சென்று கொண்டிருந்தேன். கால்கள் பழக்கமான வழியில் தடம் தெரிந்து நடந்து கொண்டிருந்தன.‘டார்ச்சு லைட்’ கையில் இருந்ததே ஒழிய, அதை உபயோகிக்கவே எனக்குப் பயமாக இருந்தது. வெளிச்சமில்லாமல் இருட்டிலேயே நடந்துவிட்டால் அபாயமோ, ஆபத்தோ எதையுமே பார்க்காமலேயே போய்விடலாம். வழியோரத்தில் டார்ச்சை அடித்துப் பார்க்கப்போய், அங்கே ஏதாவது ஒரு பயங்கர மிருகம் முடங்கிக் கிடப்பதைக் கண்கள் கண்டுவிட்டால், பின்பு கால்கள் மரத்துப் போய் அப்படியே நிற்கும்படி ஆகிவிடும்!

வழியின் பயங்கரத் தன்மையாலும், குழந்தையைப் பற்றிய கவலையாலும் என் மனம் இருண்டிருந்தது. வழியும் இருண்டிருந்ததால், மனம் இந்த இருட்டை விரும்பியது.

சர்வ சாதாரணமாகப் பயங்கர மிருகங்கள் பழகுகிற இடமாகையினால், தொலைவிலும் சமீபத்திலும் அவைகள் இருப்பதற்குரிய முழக்கங்கள் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு முழக்கம் கேட்டு முடியும்போதும், என் உடலில் உள்ள மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கும். காற்றினால் சலசலக்கும் புதர்களிலிருந்து கொடிய மிருகம் ஒன்று சிலிர்த்துக்கொண்டு கிளம்புவது போல மனத்தில் பயங்கரக் கற்பனைகள் தாமாகவே தோன்றிவிடும்.

“ஆயிற்று! இதோ இந்த மலைத் திருப்பத்தில் திரும்பி, கிழக்கே பதினைந்து - இருபது கெஜம் நடந்துவிட்டால் ‘கடுவாய் வளைவு’, ‘எஸ்டேட் பங்களா’ கண்ணுக்குத் தெரியும். ஆனால் திருப்பமும், பதினைந்து இருபது கெஜ தூரமும் சாமானியமான இடங்களா? நினைக்கும்போதே உடம்பு புல்லரித்தது.

திருப்பத்தின் முகப்பில் யாரோ பெரிய தேக்கு மரம் ஒன்றை வெட்டிக் கொண்டிருந்தார்கள் போலும் காட்டிலாகா அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு இரவோடிரவாகத் தேக்கு மரம் வெட்டிக்கொண்டு போகும் மரத் திருடர்கள் அந்தப் பகுதியில் அதிகம்.வெட்டுகிற ஓசை மிக அருகில் கேட்டதால், நான் நடந்து கொண்டிருந்த திருப்பத்திற்கு இருபது இருபத்தைந்து தப்படித் தொலைவில் அவர்கள் வெட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்று என்னால் அனுமானிக்க