பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/593

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————————

முதல் தொகுதி / கடுவாய் வளைவு 591

முடிந்தது. அவர்களையும், அவர்களுடைய மரம் திருடும் சாமர்த்தியத்தையும் பற்றி வியந்துகொண்டேதிருப்பத்தை அடைந்தேன்.வெட்டுவதற்காக வெளிச்சம் வேண்டிச் சிறிதாகத் தீ மூட்டியிருந்தனர் அவர்கள்.

திடுதிடுப்பென்று ஒருவிதமான முடைநாற்றம் என்னைத் திணற அடித்தது. நான் திடுக்கிட்டேன். ‘எந்த மிருகம் மிக அருகில் இருந்தால் அந்த மாதிரி மாமிச ரத்தமுடைய நாற்றம் வரும்’ என்பது எனக்குத் தெரியும். அந்தத் திருப்பத்தின் பெயரை ஒட்டித்தான் ‘கடுவாய் வளைவு’ என்ற பெயரே அந்தப் பிரதேசத்திற்கு ஏற்பட்டது. என் உடல் வெட வெடவென்று நடுங்கியது. கைகால்கள் உதறலெடுத்தன. உடம்பில் அங்கங்கே ரத்தம் ஓடியதா உறைந்து போய்விட்டதா என்றே தெரியவில்லை கண்கள் மிரள மிரளச் சுற்றிலும் நோக்கின. எதற்கு நான் பயந்து நடுங்கினேனோ ‘அது’ ரஸ்தாவின் மேலேயே வாலை முறுக்கியவாறு நின்று கொண்டிருந்தது!

மேட்டில் தேக்க மரம் வெட்டப்பட்டுக் கொண்டிருந்த இடத்துக்கு நேர் கீழே, ரஸ்தாவின் மேல் ‘அது’ நின்று கொண்டிருந்ததனால், அவர்கள் மூட்டியிருந்த தீ வெளிச்சத்தின் மங்கலான ஒளியில் நான் அதைக் காணமுடிந்தது.

மனிதவாடை தட்டுப் பட்டுத்தான் ‘அது’ அந்த இடத்தைவிட்டுப் போகாமல், அடித்த முளைமாதிரி வாலை முறுக்கிக் கொண்டு நிற்கிறது என்பதை நான் தெரிந்து கொண்டேன். பிரகாசமாக எரியும் இரண்டு சிவப்பு மின்சார விளக்குகளைப் போன்ற அந்தக் கண்கள், மரம் வெட்டும் ஓசை வந்த மேட்டை வட்டமிட்டுக் கொண்டிருந்தன. அவர்கள் மூட்டியிருந்த தீயே அதை அங்கே தடுத்து நிறுத்தியிருக்கிறது என்பது எனக்குப் புரிந்துவிட்டது. தவிர, திருட வந்திருக்கும் அவர்கள் துப்பாக்கி முதலிய ஆயுத வசதிகளோடுதான் இந்த நேரத்தில் இந்த இடத்துக்கு வந்திருக்க முடியும்! துப்பாக்கியால் சுடும்போதுகூடச் சுடுபவர் மேல் ஆக்ரோஷமாக எதிர்த்துப் பாயும் மிருகத் தன்மை வாய்ந்த மிருகமது. ஆனால் தீ எரிந்து கொண்டிருந்தால் மட்டும் அதைக் கண்டு தயங்கி நின்றுவிடும் சுபாவம் அந்த மிருகத்துக்கு உண்டு.

ஓடவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் அப்படியே நின்றேன்.நான்.நாக்கு அடித் தொண்டையில் ஒட்டிக் கொண்டது.‘எங்கே ஓடுவது? எப்படித் தப்புவது?’ எதையுமே பிரக்ஞையோடு சிந்திக்க முடியவில்லை என்னால் ‘இன்றைக்கு நம்முடைய உயிர் இந்தக் கடுவாய்ப் புலியால் அடித்துக் கொல்லப்பட வேண்டும் என்பதுதான் ஈசுவர சித்தம் போலும்’ என்றெண்ணி, ஒடுங்கிவிட்டது என் உணர்வு.

கை நடுக்கத்தால் கையிலிருந்த ‘டார்ச்’ கீழே விழுந்து ஓசை உண்டாக்கிவிட்டது. சிறிய ஓசைதான்! ஆனால் அந்தப் பயங்கர மிருகத்தின் கூரிய செவிகளுக்கு அது போதாதா, நான் நிற்பதைத் தெரிந்து கொள்வதற்கு?

அப்பப்பா! மேட்டைப் பார்த்து வாலை முறுக்கிக் கொண்டிருந்த அந்த மிருகம் எவ்வளவு வேகமாக என் பக்கம் திரும்பியது என்று நினைக்கிறீர்கள்? இப்போது நினைத்தாலும் குடல் நடுங்குகிறது. தீப்பந்தங்களின் ஜ்வாலை போன்ற கண்களுடன ‘அது’ என்னைப் பார்த்துப் பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டது. நான் உயிரோடு