பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/594

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

592நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————

செத்துக் கொண்டிருந்தேன். அது கொல்வதற்கு முன்பே - அது என்னை அறைந்து கொல்லயத்தனிப்பதற்கு முன்னால் பயம் என்ற கடுவாய் என் தைரியத்தை அறைந்து கொன்று விட்டது!

வாட்ட சாட்டமான அதன் உடல் பின்னுக்குப் பதுங்கி வளைந்து பாயத் தயாராகப் பம்மியது. நான் கண்களை இறுக மூடிக் கொண்டேன். அலற வேண்டும்போல இருந்தது. நா எழவில்லை. அடுத்த நொடிஎன் மார்பிலும் முகத்திலும் பிச்சுவாக் கத்திகளைப் போன்ற கூரிய நகங்கள் மோதிக் கிழிக்கும் என்று எதிர்பார்த்தேன். எனக்கும் அதற்கும் இடையில் பத்து அல்லது பன்னிரண்டடி இடைவெளி இருக்கலாம்.

ஒரு நொடியாயிற்று! ‘சடசட’வென்று ஏதோ முறிந்து விழும் ஓசை என் செவிகளை அதிரச் செய்தது. அதையடுத்து, ஒரு புலியின் பெரிய முழக்கம், வயிற்றிலே ஐந்தாறு துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்ததும் பரிதாபகரமாக அலறுமே அந்த மாதிரி அலறல்! காடே கிடுகிடுத்தது.

‘என்மேல் புலி பாயவில்லை.நான் உயிரோடுதான் இருக்கிறேன்’ என்பதை உறுதி செய்துகொண்ட பின், மெல்லக் கண்களைத் திறந்தேன். ஈனஸ்வரத்தில் அதே மிருகத்தின் வேதனை அலறல் என் செவிகளில் கேட்டுக் கொண்டிருந்தது. எதிரே பார்த்தேன்; என்ன கோரம்? அந்தப் பயங்கர மிருகத்தின் உடல் பருத்த தேக்கு மரக்கட்டைக்கிடையில் சிக்கி நசுங்கிக் கொண்டிருந்தது. சுற்றி ரத்த வெள்ளம் தேங்கியிருந்தது. ஈனஸ்வரத்தில் வந்துகொண்டிருந்த மெல்லிய அலறலும் சிறிது சிறிதாக ஓய்ந்தது.

தரிசு நிலத்தில் பாய்ந்த வாய்க்கால் தண்ணீர்போல, ஏறக்குறைய பிரேதமாகிவிட்ட என் உடம்பில் தைரியம் ‘குபுகுபு’ வென்று எங்கிருந்தோ வந்தது! சிறிது நாழிகைக்கு முன் துப்புரவாக வெளியேறியிருந்த பொருளல்லவா அது?

அப்போது என் மனத்தில் என்ன தோன்றிற்று தெரியுமா? ஆண்டவன்தான் எவ்வளவு நல்லவன்? க்ஷணப் போதில் குறுக்கிட்டு விளைவை எப்படி மாற்றிவிட்டான்! திருடர்கள் வெட்டிக் கொண்டிருந்த தேக்கு மரமாக இருந்து, சரியாகப் புலி என்மேல் பாயப் பதுங்கிய அதே நேரத்தில், தான் வெட்டுண்டு முறிந்து, அதன் மேல் பாய்ந்து ஆண்டவனே எனக்காக ஓர் அற்புதமான திருவிளையாடலை நடத்திவிட்டதுபோலத் தோன்றியது எனக்கு ‘அழிந்துவிட்டோம்’ என்று கருதிய என் உயிரை, அழியாமற் காத்தும், ‘அழித்துவிடப் போகிறோம்’ என்று கருதிப் பாய்ந்த அதன் உயிரை அழியச் செய்தும், அந்த இரவில் விதியின் மூலம் விளையாடிய இறைவனைக் கைகூப்பி வணங்கினேன்.

துணிச்சலோடு கீழே விழுந்திருந்த ‘டார்ச்சை’ எடுத்து மரத்தை நோக்கி ஒளியைப் பரவச் செய்தேன். அருகில் சென்று பார்த்தேன். சரியாகப் புலியின் நடு வயிற்றில் விழுந்திருந்தது மரம். மூன்று யானைகள் இருக்கவேண்டிய அவ்வளவு சுற்றுப்பருமன் உடைய மரம் அது.