பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/595

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————————

முதல் தொகுதி / கடுவாய் வளைவு 593


புலி நல்ல ஜாதிக் கடுவாய்.ஆகையால் பார்ப்பதற்குப் பதினாறடி வேங்கைமாதிரி இருந்தது. நசுங்கிச் செத்துக் கிடந்த அதைப் பார்க்கும்போது, ‘மனித உயிருக்கு ஆண்டவன்தான் எஜமானன்! அவனுடைய ஆணை, விதி என்ற வடிவில் துணை செய்தாலொழிய,எந்த ஒரு துஷ்ட ஜந்துவும் மனிதனைக் கொல்ல முடியாது!’ இப்படி ஓடியது என் எண்ணம்.

மேலும், அங்கே தாமதித்தால் மரத்தை வெட்டித் தள்ளியவர்கள் வருவார்கள்; அவர்கள் கண்களில் தென்பட்டால், விசாரணைக்கு ஆளாக நேரிடும். அதனால் உடனே திருப்பத்தைக் கடந்து பங்களா காம்பவுண்டை நோக்கி நடந்தேன். போகும்போது அந்த மரத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொள்ளவேண்டும் போலத் தோன்றியது எனக்கு.

அப்படியே செய்துவிட்டு, மலேரியாக் காய்ச்சலினால் துன்புறுகிற என் குழந்தையைக் காணத் துடிக்கும் ஆவலோடு விரைவாகச் சென்றேன்”கரையாளர் கூறி முடித்தார்.

ஜீப் ஒரு பெரிய பங்களாவின் முன் போய் நின்றது. ஒரு மலைத் திருப்பத்தை அடுத்து அடர்ந்த மலைப் பகுதியினிடையே அது அமைந்திருந்தது. கரையாளர் கூறிய சம்பவத்தில் வந்த பங்களா மாதிரியே, சுற்றி ஆழமான குழி வெட்டியிருந்தது. அடர்த்தி என்றால் அப்படி இப்படிப்பட்ட அடர்த்தி இல்லை. இரண்டு அடர்ந்த மலைப்பகுதி அது.

கரையாளர் என்னைப் பங்களாவிற்குள் அழைத்துச் சென்றார். அங்கிருந்தவர்கள் அன்போடு வரவேற்றனர். தேநீரும் நேந்திரங்காய் வறுவலும் சாப்பிடக் கிடைத்தன.

“இந்த மலைப்பகுதிகளில் இயற்கை அழகு எப்படி இருக்கிறது? இங்கே இன்னும் கொஞ்சம் சுற்றிப் பார்க்கலாமா?” கரையாளர் தேநீரைப் பருகிவிட்டு என்னைப் பார்த்துக் கேட்டார்.

“ஆகா! கட்டாயம் பார்க்கலாம். எவ்வளவு அற்புதமான இடமாக இருக்கிறது? என்ன ‘ஸீனரிகள்!’

தேனீரைக் குடிப்பதற்குக் கையிலெடுத்துக் கொண்டே கூறி வியந்தேன் நான்.

“இந்த இடத்தின் பேர் என்ன தெரியுமா?”

“என்னவாம்? சொல்லுங்களேன்.”

“இதுதான் சார் ‘கடுவாய் வளைவு!’”

பயத்தில் தேநீர்க் கிண்ணத்தைக் கீழே போட்டு உடைத்துவிட்டேன். என் மேலெல்லாம் டீ சிந்திவிட்டது. கதைகளில் ஆயிரம் தத்துவம் பேசலாம். ஆனால் உணர்ச்சி வருகிறபோது, பயன் என்னவோ பயமாகத்தானே இருக்கிறது!

(1963-க்கு முன்)


நா.பா. I - 38