பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/596

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79. மணக்கும் திருட்டு!

ன்னும் ஓரிரு மாதம் தொடர்ந்து இப்படியே நடந்தால், ‘ஃபாரஸ்டு கார்டு’ பரசுராம், அந்த வேலையில் இருப்பதற்கே தகுதியில்லை என்பது போலாகி விடும். அவருடைய உத்தியோகத்துக்கு, அது ஒரு சோதனைக் காலமாக வாய்த்திருந்தது. சோதனையில் வெற்றி பெறுவதற்காக, அவரும்தான் இராப் பகல் பாராமல், காட்டிலும் மலையிலும் அலைந்து கொண்டிருந்தார். அலைந்து பயன் என்ன? யாரோ அவருக்கு ஆகாதவர்கள் மேலதிகாரிகளின் சந்தேகத்தை அவர் மேலேயே திருப்பி விட்டு விட்டார்கள்.

விஷயம் வேறொன்றும் இல்லை; இதுதான்.அவருடைய ஏரியாவுக்கு உட்பட்ட ‘ரிசர்வ் ஃபாரஸ்ட்டில்’ சந்தன மரங்கள் அதிகம். சர்க்காருக்கு அவைகளால் அதிக வருமானம். இப்பொழுது சில நாட்களாகத் தொடர்ந்து சந்தன மரங்கள் களவு போய்க் கொண்டிருந்தன. சந்தன மரங்களுக்கு வரிசை நெம்பர், தனி ரிஜிஸ்தர் எல்லாம் உண்டு. நாளைக்கு எப்போதாவது வருஷாந்திர இன்ஸ்பெக்ஷன் நடந்தால் ரிஜிஸ்தரில் உள்ள நெம்பர்களின் படிமரங்கள் இருக்க வேண்டும். இல்லையானால், மேலதிகாரிகள் அவரைத்தான் குடைவார்கள். பரசுராம்தான் அவைகளை வெட்டி, அங்கிருந்து இரகசியமாகக் கடத்திக் கள்ள விற்பனை செய்வதாக யாரோ மொட்டை மனு வேறு எழுதிப் போட்டிருந்தார்கள்.

சிந்தனையில் லயித்தவராய், வீட்டு வாசலில் உட்கார்ந்தார் பரசுராம். வேலைக்காரச் சின்ன மாயன், வீட்டு வாசலிலிருந்து காட்டிலாகா அலுவலகத்திற்குப் போகும் வழியைப் பெருக்கித் தூய்மை செய்து கொண்டிருந்தான். வீட்டுக்கு அடுத்த, கட்டிடம் காட்டிலாகா அலுவலகம்.

“எசமான், பண்ணையார் ஐயா வாராருங்கோ...”

பரசுராம் திரும்பிப் பார்த்தார். தொலைவில் பண்ணையார் சிவஞானம் பிள்ளையின் ஜீப் கார், முக்கித் திணறி மலைத் திருப்பத்தில் ஏறிக் கொண்டிருந்தது.

‘அடேடே! நான் இலாகா வேலைகளினால் ஒரே தொல்லையிலே மாட்டிக் கொண்டிருக்கிறேன். இப்போது இந்த மனுஷன் எங்கே வந்து சேர்ந்தார்? ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் பேசாமல் எழுந்திருக்க மாட்டாரே?’

அவர் தமக்குள் அலுத்துக் கொண்டார். சிவஞானம் பிள்ளைக்கு அந்த மலையடிவாரத்தில் ஐம்பது அறுபது ஏக்கர் நிலம் அடங்கிய பெரிய பண்ணை ஒன்றிருந்தது. நிலங்களுக்கு நடுவே, நாலைந்து இறவைக் கிணறுகளும் இருந்தன. மழைக் காலத்தில் மலை ஓடைகளிலிருந்து வரும் நீரையும், மற்ற நேரங்களில் இறவைக்