பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/597

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————————

முதல் தொகுதி / மணக்கும் திருட்டு! 595

கிணறுகளையும் கொண்டு, அவர் விவசாயம் நடத்தி வந்தார். அந்த ‘ஏரியா’வில் கொஞ்சம் செல்வாக்குள்ள பெரும்புள்ளி என்ற முறையில், பரசுராமுக்குப் பழக்கமானார். பழக்கம் வளர்ந்து, தினம் பரசுராமுடன் ஏதாவது வெகுநேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுப் போவது பண்ணைப் பிள்ளையின் ‘மாமூ’லாகி விட்டது.

“வாங்க வாங்க! ஏது இப்படி இந்தப் பக்கமா?...”

சிவஞானம் பிள்ளை ஜீப்பிலிருந்து இறங்கினார்.

“வேறே எதுக்கு வரப் போறேன்? எல்லாம் உங்களைப் பார்த்து நாளாச்சேன்னுதான்...”

“ரொம்ப சந்தோஷம்...”

“ஆமா! இதென்ன? நான் கேள்விப் படறது நெசந்தானா? யாரோ சந்தன மரங்களைக் கடத்தராங்களாமே?”

“அதையேன் கேட்கிறீங்க? ஒரு மாசமா எனக்கு ராத்திரித் தூக்கமில்லே. புலி, கடுவாய்க்குப் பயப்படாமே இருட்டிலேயே சுத்தறேன். அப்படியும் ஆள் இன்னார்தான்னு கண்டுபிடிக்க முடியலே, போங்க!”

“நீங்க சும்மாஇருங்க, ஸார்! இதை இப்படியே விடறதாவது? நான் கவனிக்கிறேன். உங்க பேரிலே அவப்பேரு ஏற்பட்டா அது எனக்கில்லியா?”

“என்னமோ, கூட இருந்து ஒருத்தருக்கொருத்தர் உபகாரமாத் திருட்டைக் கண்டுபிடிச்சுட்டா, சர்க்காருலே என் தலை உருளாது!”

“நான் சொல்றபடி கேளுங்க! இந்த மலையிலே திரியற பளிஞர்களை எல்லாம் பிடிச்சு, ஒரு நாளு கட்டி வச்சு உதைச்சா உண்மையைக் கக்கிடுவாங்க!”

“சே! சே! பளிஞங்க கள்ளங்கபடமில்லாத சாதியாச்சே! அவுங்க மேலே எனக்குக் கொஞ்சம் கூடச் சந்தேகமே இல்லை” பரசுராம் பண்ணைப் பிள்ளையின் கருத்தை மறுத்தார்.

“அதெல்லாம் நீங்க கொஞ்சம்கூட இரக்கப்படக் கூடாது ஸார். இப்போ எனக்குப் பண்ணை வேலையா கொஞ்சம் அலைய வேண்டியிருக்கு. நாளைக்கு என் ஆள்கள் ஏழெட்டுப் பேரைக் கூட்டி வர்றேன். எல்லாப் பளிஞர்களையும் பிடிச்சு, மேலே ஆகவேண்டியதைப் பார்ப்போம்” பண்ணைப்பிள்ளை வழக்கத்துக்கு விரோதமாகச் சீக்கிரமாகவே பேச்சை முடித்துக்கொண்டு கிளம்பி விட்டார்.

“சரி! நீங்க போயிட்டு வாங்க” இந்த மட்டில் சுருக்கக் கிளம்பினாரே என்ற மகிழ்ச்சியில், அவருக்கு விடை கொடுத்து அனுப்பினார் பரசுராம்.

பண்ணையார் சிவஞானம் பிள்ளை ஜீப்பில் ஏறிக்கொண்டு கிளம்பினார். ஜீப் மலைப் பாதையில் இறங்கி மறைந்தது.