பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அவர் சார்ந்திருந்த அரசியல் சித்தாந்தங்களின் தாக்கமும் அவர்தம் படைப்புக்களில் பிரதிபலிக்கின்றன.

அவர் தம் எழுத்தை வித்தை காட்டும் கருவியாக்கிவிடவில்லை. பகிர்ந்தளிக்கும் பக்குவத்துடன் அதே சமயம் வாசகரைக் கைகொடுத்து மேலுயர்த்திக் கரம் கோர்த்து நடைபயின்றிருக்கிறார் நா.பா. இக்கதைகளில்.

அவர்தம் இலக்கியக் கொள்கைகள், சிறுகதை பற்றிய அவரது நோக்கு நிலைகள் ஆகியவை அவர்தம் முன்னுரைகளிலிருந்து பகுத்துத் தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

நா.பா. மிகக் குறுகிய காலத்திலேயே அசுர சாதனைகள் புரிந்து விட்டு விடைபெற்றுக் கொண்டார்.

அவரது சிறுகதைகளைக் காலவரிசைப்படி தொகுக்க எம்மால் இயன்ற அளவு முயன்றுள்ளோம். ஒருவித குறிப்புகளோ, இதழ், காலம் போன்ற வெளியீட்டு விபரங்களோ முழு அளவில் கிடைக்கவில்லை. நா.பா.வின் மரணத்தைக் கொஞ்சம்கூட எதிர்பாராத தருணத்தில் சந்தித்ததால் பாதி வழிப் பயணமாக முடிந்துவிட்டதை உணர்கிறோம்.

எம்மால் இயன்ற அளவு கதைகளைச் சேகரித்துள்ளோம். எனினும் நா.பா.வின் முதல் கதை கிட்டவில்லை. இடையிலும் சில கதைகள் விடுபட்டிருக்கக்கூடும்.

நா.பா.வின் சமூகச் சிறுகதைகளை இரு தொகுதிகளாகவும் சரித்திரச் சிறுகதைகளை ஒரு தொகுதியாகவும் பதிப்பித்துள்ளோம்.

நெடுங்கதைகள், குறுநாவல்களைத் தவிர்த்துள்ளோம். அவை தனியே தொகுக்கப் பெற்று பின்னர் வெளிவரும்.

தனிமனித குணங்கள், அரசியல் சமுதாயப்போக்குகள் இவை இரண்டுமே இவரது தண்டவாளங்கள்.

ஒரு கவியாய் – கனவு மட்டுமே கண்டு சொப்பனாவஸ்தைகள் மட்டுமே படவில்லை இவர். அடிப்படையில் இவர் ஒரு கவி. ஆகவே, கவியாகவே விஷயங்களைப் பார்க்கிறார்; ஆனால், அதே சமயம் ஒரு சிந்தனையாளராக – சமுதாய அக்கறை கொண்ட படைப்பாளியாக மிகத் தெளிவாக, தீர்க்கமாகப் பிரச்னைகளை அலசுகிறார்; அழுத்தம் திருத்தமாகப் பிரச்னைகளைப் பேசுகிறார். தீர்வும் தருகிறார் – தன் நோக்கில்.

இவை தவிர, போகிற போக்கில் முகத்தில் படும் ஒரு தென்றல் வருடலாய் இவர் தரும் சிந்தனைச் சிதறல்கள் மிக ரசிக்கத்தக்கன.