பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்




"நீங்கள் விட்டுவிடத் தயாராக இருக்கலாம். ஆனால் அந்தப் பெண் மாலா உங்களை விடத் தயாராயில்லையே? உங்கள் கலைக்கு அடிமையாக இருந்தவள், இப்போது உங்கள் வாழ்க்கைக்கும் அடிமையாக விரும்புகிறாள்.”

“அவள் இளம் பெண்; சிறியவள், அறியாதவள். நானும் ஏதோ வெறியில் தத்துப்பித்தென்று எழுதி அவள் மனத்தில் ஆசைக் கனலை மூட்டியிருப்பேன்.என்னை மன்னித்துவிடுங்கள். அவளுக்கு ஏற்றவனே இல்லை நான்.”

என் பேச்சை யாருமே கேட்கவில்லை. இறுதியில் நான்தான் தோற்றேன். என் ஜாதகத்தை உன் மாமாவிடம் கொடுத்தேன். மறுநாளும் நீ பாட்டுக்கு வரவில்லை. நம்முடைய அந்தக் கல்யாணம் நடக்கின்றவரை வரவே இல்லை!

வீட்டுக்கே வரப்போகிறவள்; பாட்டுக்கு வராவிட்டால் என்ன என்று பேசாமல் இருந்துவிட்டேன். என் மனத்தோடு எண்ணங்களும் கனவுகளும் சேர்ந்து துடித்திருக்கும். ஏன்? ஏங்கக்கூட ஏங்கியிருக்கலாம்!

கனவா? வேடிக்கையா? அல்லது என்றோ மலர்ந்து வாடிப்போன வெறும் கற்பனையா? அந்தக் கலியாணம் - ‘நீயும்’ ‘நானும்’ ‘நாமாக’ மாறி, உன்னையும் என்னையும் பிணைத்த அந்தத் தாம்பத்ய உறவு மெய்யாகவே வடபழநியில் முருகன் திருமுன் நடந்துவிட்டது.

“ஏழையானால் என்ன? தாலி கட்டுவதற்கும் இன்னொரு ஏழை இந்தப் பரந்த உலகத்தில் கிடைக்காமலா போய்விட்டான்? ரதி மாதிரிப் பெண்ணை வளர்த்து இப்படி ஒரு நொண்டியாய்ப் போனவனுக்கா கொடுப்பார்கள்?”

“யார் கொடுத்தார்கள்? அந்தப் பெண்தான்.அவனைத் தவிர வேறு யாரையும் பண்ணிக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்ததாம்”

“பாடிப் பாடிப் பாட்டுச் சொல்லிக் கொடுக்கிற சாக்கில் அந்த நொண்டி அவளை அப்படி மயக்கிவிட்டான் போலிருக்கிறதே! அதனால்தான் இப்படி நடந்திருக்கிறது.”

ஊர் உலகத்தில் உனக்கும் எனக்கும் நடந்த திருமணத்தைப் பற்றி என்னென்னவோ பேசினார்கள். இந்த உலகத்தில் பேசுகிற வாய்களுக்கும், கேட்கிற காதுகளுக்கும் வியவஸ்தை என்று ஏதாவது இருந்தால்தானே?

நீ என் வீட்டுக்கு விளக்கேற்ற வந்தாய்! இருளை மட்டுமா போக்கினாய்? என் இதயத்தைப் பற்றுள்ளதாக மாற்றினாய்! பாசமுள்ளதாக மலர்த்தினாய்! உன்னோடு உன் அன்பு வந்தது. உன் அன்போடு உன் அழகு வந்தது. உன் அழகோடு இனிய பண்பும் வந்தது. நான் கை நொண்டி என்பதையே மறக்கச் செய்துவிட்டாய். என்னை, என்னுடையதை, எனக்கு என்பதையெல்லாம் இழந்து கிடந்தவனை, நம்மை, நம்முடையதை, நமக்கு என்றெண்ணி வாழவைத்தாய்.மாலா! நீ பெண்ணல்ல! பெண் தெய்வம்.