பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/601

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————————

முதல் தொகுதி / மணக்கும் திருட்டு! 599


அவர் குடத்தருகே மூக்கைத் தாழ்த்தி முகர்ந்து பார்த்தார். அதே வாசனை ஜமாய்த்தது. சந்தன அத்தர் ‘எஸென்’ஸில் நாலைந்து துளியைத் தண்ணீரில் ஊற்றி விட்டால் எப்படி மணக்குமோ, அந்த மாதிரி.

“இதுதான் வேலாயி கொண்டுவந்த தண்ணியா?”

“எனக்கு உங்ககிட்டப் பொய் சொல்லி என்ன ஆகணும்? சத்தியமா இதுதான் அவ கொண்டு வந்தது.”

“அலமேலு பூஜைக்குச் சந்தனம் அரைப்பாயே! அரைச்ச கையோட குடத்துத் தண்ணீரைப் புழங்கினாயோ?”

“இன்னிக்கு நான் சந்தனமே அரைக்கல்வியே? அவ தண்ணியைக் கொண்டுவர போதே, அது அப்படித்தான் வாடை அடிச்சுது!”

“சந்தனத்தை அரைச்சுக் கலக்கின மாதிரின்னா வாடை வரது?”

“யாரு கண்டா? இறவைக் கிணறுதானே? சந்தனக் கட்டை ஏதாவது தப்பித் தவறி விழுந்து அழுகிப் போயிருக்குமோ, என்னவோ?”

அலமேலு சாதாரணமாகத்தான் இந்தச் சந்தேகத்தைக் கிளப்பினாள்.

பளிச்சென்று மின்வெட்டுப் போலப் பரசுராமின் மனத்தில் ஒரு யோசனை எழுந்து நின்றது.

“அலமேலு, நிச்சயமா வேலாயி கொண்டுவந்த போதே இந்த வாடை தான் அடிச்சுதா?”

“நான் என்ன குழந்தையா, உங்ககிட்டப் பொய் சொல்றதுக்கு? இதே சந்தன வாடைதான்! வேலாயியை வேணும்னா கேட்டுப் பாருங்களேன்!”

“இந்தா, கொஞ்சம் இரு! சோற்றை இலையிலே போடாதே! நான் இப்போ சாப்பிடலை.”

“ஏன்? பசிக்காதோ?”

“ஓர் அவசரமான காரியம்; போயிட்டு வந்திடறேன். அந்தச் சின்னமாயன் குடிசையிலே இருப்பான். ஒரு சத்தம் போடு; நான் கூப்பிட்டேன் என்று!” அலமேலு சின்னமாயனைக் கூப்பிடப் போனாள்.

“என்னங்க எசமான்?”

“புறப்படு, போகலாம் சாப்பாடுகூட அப்புறம்தான்.”

“எங்கே எசமான்?”

"நீ பேசாமே எங்கூடவா சொல்றேன்!”

பரசுராம் சின்னமாயனை அழைத்துக்கொண்டு, அரைமணி நேரத்தில் சிவஞானம் பிள்ளையின் பண்ணையிலுள்ள இறவைக் கிணற்றுக்குப் போய்ச் சேர்ந்தார்.வேலாயி