பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/602

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

600நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————

அடையாளம் சொல்லியிருந்த கிணற்றருகில் போய் நின்று கொண்டார்கள் இருவரும். கிணற்றுக்குக் காவல் இருந்ததாக வேலாயி சொன்ன ஆள், அப்போது அங்கேயில்லை. சாப்பிடப் போயிருந்தானோ என்னவோ? அதுவும் அவர்களுக்கு வசதியாகவே போயிற்று.

“டேய் உனக்கு முக்குளி நீச்சுத் தெரியுமாடா சின்னமாயா?”

“நல்லாத் தெரியுமுங்க!”

“கிணற்றிலே இறங்கி முக்குளிச்சுப் பாரு, சொல்றேன் - ஏதாவது கட்டிப் போட்டிருக்கான்னு?”

சின்னமாயன் வேஷ்டியை வரிந்து கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்தான்.

பத்து நிமிஷம் அவன் உள்ளேயே துழாவினான். மேலே நாலா புறமும் நீர்க் குமிழிகளும், தண்ணீர் வண்டலும் குபுகுபுவென்று வருவதிலிருந்து, பரசுராம் அவன் உள்ளே நாற்புறமும் துழாவுகிறான் என்பதை அனுமானித்துக் கொண்டார்.

சின்னமாயன் தண்ணீரிலிருந்து வெளியேறிப் படிவழியே மேலே வந்தான். அவன் முகத்தில் ஆச்சரியமும் பரபரப்பும் சாயையிட்டிருந்தன.

“எசமான் கட்டு கட்டா சந்தன மரம்... கிணறு தாங்காமக் கெடக்கு”... சின்ன மாயன் ஆச்சரியம் தாங்காமல் இரைந்து கூறினான்.

“உஸ்ஸ்! வாயை மூடு கத்திக் காரியத்தைக் கெடுத்துடாதே” பரசுராம் ஆள்காட்டி விரலை உதட்டில் வைத்துஅவனுக்கு ஜாடை காட்டினார்.

“நான் அப்பவே சொன்னேனே, கேட்டீங்களா? பண்ணை பிள்ளை, பழைய எசமான் காலத்துலேயே, ரெண்டு மூணு தரம் சந்தன மர விவகாரத்திலே அகப்பட்டுக்கிட்டிருக்காரு அவரை நம்பக் கூடாதுன்னு?”

“சின்னமாயா! நீ பேசாமே இருக்கமாட்டே? எனக்குப் படுகோபம் வரும்.”

சின்னமாயன் ‘கப்சிப்’ என்று அடங்கிவிட்டான்.

பரசுராம் பைக்குள்ளிருந்த காகிதம் ஒன்றை எடுத்துப் பேனாவால் ஏதோ எழுதினார்.

“இந்தா, ஓடு! போயி, இதை ஸ்ரீ வில்லிபுத்துரர் போலீஸ் ஸ்டேஷனிலே கொடு சப்-இன்ஸ்பெக்டர் இருப்பார். ஒண்ணரை மணிக்குள்ளே இங்கே வரச்சொல்லு. நான் சாப்பிடாமே இங்கேயே காத்திருப்பேன்.

“ஆகட்டுங்க!” சின்னமாயன் அதை வாங்கிக்கொண்டு ஓடினான்.

அது காட்டழகர் கோவில் ஃபாரஸ்ட் ஏரியா. அங்கிருந்து சண்பகத் தோப்பு வழியாகப் போனால், நாலு மைலில் ஸ்ரீவில்லிபுத்துர் பெரிய நகரம். அந்த நகரத்துக்குத்தான் போலீஸ் உதவி வேண்டிச் சின்னமாயனை அனுப்பிவிட்டுக் காத்திருந்தார் பரசுராம்.