பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/604

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80. கண்மாய் உடைப்பு

கிராம முன்சீப் பரமசிவம் பிள்ளைக்குத் திக்கென்றது. நாலைந்து விநாடிகள் ஒன்றுமே தோன்றாமல், பிரமை பிடித்துப் போய், சிலை போல் நின்று விட்டார் அவர்.

ஆறு மைல் சுற்றளவுள்ள பெரிய கண்மாய் உடைந்து, பிரவாகம் ஊரை நோக்கி வருகிறது என்றால், அந்தச் செய்தி யாரைத்தான் திடுக்கிடச் செய்யாது?

ஊரெல்லாம் ஒரே கலவரமாகி விட்டது. கூச்சலும் கூப்பாடுமாக, மண் வெட்டியை எடுத்துக் கொண்டு ஓடுவோர் ஒரு பக்கம்; அணையிட்டு அடைப்பதற்காக வைக்கோற் பரணைகளையும், மணல் அடைத்த சாக்கு மூட்டைகளையும் தூக்கிக் கொண்டு ஓடுவோர் ஒரு பக்கம். போர் வந்தவுடன் உண்டாகிற படைகளின் எழுச்சி போல, வற்றாயிருப்பு ஊர் முழுவதிலும் கண்மாய் உடைப்பு பெரிய குழப்பத்தை உண்டாக்கி விட்டது.

ஊருக்கு மேற்கே மலைச் சரிவில் கண்மாய். அது நீர் நிரம்பி அலை மோதிக் கொண்டிருக்கிற கடல் போல இருந்தது. கண்மாய்க்கு முன்புறம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கதிர் வாங்கும் பருவத்தில் இருந்தன நெற் பயிர்கள். இந்தப் புறம் ஊர்.

இப்படிப்பட்ட ஒரு நிலையில், நட்ட நடுவில் மடையிருந்த இடத்திற்கு அருகில் கரை உடைத்துக் கொண்டது என்றால், அந்தப் பயங்கரத்தை என்னென்பது! பரமசிவம் பிள்ளை தலையாரியையும், வெட்டியானையும் அழைத்துக் கொண்டு கரைக்கு ஓடினார். போகும் போதே ரெவின்யூ இன்ஸ்பெக்டருக்கு ஆள் அனுப்பினார். கலெக்டருக்குத் தந்தி பறந்தது.

பயமும், பரபரப்பும், குழப்பமுமாக ஊர் அல்லோலகல்லோலப்பட்டதே ஒழிய, ‘எப்படி கண்மாய் உடைந்தது? ஏன் உடைந்தது?’ என்பதை யாருமே சொல்லவில்லை. அது யாருக்கும் தெரியவுமில்லை.

ஊராருக்குக் கவலை ஒரு விதத்தில் இல்லை; பல விதத்தில் கவலை! சமுத்திரம் போலத் தேங்கி நிற்கிற தண்ணீர் உடைத்துக் கொண்டால், அதற்கு முன்புறமிருக்கிற விளைநிலங்கள் பயிர்களோடு அழிந்து போகுமே என்ற கவலை, தண்ணீர் முழுவதும் உடைத்துக் கொண்டு போய்விட்டால் அந்த வருஷ மகசூலே இல்லாது போய் விடுமே என்ற ஏக்கம்; உடைத்துக் கொண்டு வருகிற தண்ணீர் ஊருக்குள் புகுந்து, வீடு வாசல்களை அழிக்காமல் விட வேண்டுமே என்று மற்றோர் பெரிய பயம்! இப்படியாக ஊர் மக்கள் எல்லோருமே கவலையில் ஆழ்ந்திருந்தார்கள். சிறுவர் சிறுமியர்களுக்கும், விடலைப் பிள்ளைகளுக்கும் இதையெல்லாம்விட பெரிய கவலை ஒன்று ஏற்பட்டிருந்தது; ‘என்றும் காண முடியாத பெரிய வெள்ளம் கண்மாய் உடைத்துக்