பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/605

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————————

முதல் தொகுதி / கண்மாய் உடைப்பு 603

கொண்டு வருகிறது. ‘அந்த வெள்ளத்தைப் பார்க்கப் போகக்கூடாது’ - என்று தாய் தந்தையர்கள் தங்களை வீட்டில் அடைத்து வைக்கிறார்களே!’ என்பதுதான், இளம் உள்ளங்களின் அந்தக் கவலை!

குழந்தைகளை அடக்கிவிட்ட பெரியவர்கள், தங்கள் ஆசையை மட்டும் அடக்க முடியவில்லை! வீடுகளின்மேல் மச்சுகளில் ஏறி மேற்கே பார்த்தனர்.

என்ன கோரம்? பார்க்கச் சகிக்கவில்லை. மேற்கே கண்ணுக்கெட்டிய தூரம்வரை ஒரே நீர்ப்பிரவாகம். பச்சைப் பசேலென்று நெற்பயிர்கள் தென்பட்ட இடமெல்லாம், காவி நிறச் செந்நீர் மூடி முக்குளித்துப் போகச் செய்திருந்தது.

செந்நிற மலைப்பாம்பு ஒன்று தென் வடவாகக் கிடப்பதுபோலத்தான் அந்த நீளமான கண்மாய்க் கரையின் நடுவே பயங்கரமான உடைப்பும் அப்போது தென்பட்டது.

மனிதன் கட்டிவைத்த மண் சுவரான கரையை உடைத்துக் கொண்டு, இயற்கை கட்டு மீறும், பிரமிக்கத்தக்க அழகைக் கண்டு வியந்து கொண்டிருந்தார்கள் பெரியவர்கள்.

ண்மாயின் வடபுறத்துக் கரையில் திருவிழாக் கூட்டம். “போடு! எங்கே மணல் மூட்டை?” “கரடு வெட்டிக் கொண்டு வா.” “கொண்டா, வைக்கோற் பரணையை!” “அடே தள்ளி நில்லு! விழுந்தால் செத்துப் போவே!” இப்படியாக ஒரே கூக்குரல்.

‘ஹோ’வென்று உடைத்துக் கொண்டு, ஓடும் தண்ணீரின் இரைச்சலையும் மீறிக்கொண்டு, அங்கே கூடியிருந்தவர்களின் இரைச்சல் கேட்டது.

கரையின் தெற்கு முனைக்குப் போவதற்கு வழியில்லாமல் வெள்ளம் சூழ்ந்து விட்டதால், வடபுறத்துக் கரையில்தான் ஊரார் அடைக்க முயன்று கொண்டிருந்தனர். வடபக்கம் மலைச் சரிவைச் சேர்ந்த மேடாக இருந்ததனால் போகவரப் பாதை இருந்தது.

உடைப்பின் வடக்கு முனையில் நிகழ்ந்துகொண்டிருந்த அடைப்பு முயற்சிகளில் ஈடுபட்டிருந்தோர், தென்முனையில், ஒரு வியக்கத்தக்க காட்சியைக் கண்டனர்.

பன்னிரண்டு பதின்மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு குடியானப் பெண் கையில் தொரட்டுக் கம்புடனும் மேய்ப்பதற்காகக் கொணர்ந்திருந்த் ஏழெட்டு ஆடுகளுடனும் தன்னந்தனியே உடைப்பின் தெற்கு முனையில் நின்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள்.

‘அவள் என்ன கூச்சலிடுகிறாள்? ஏன் கூச்சலிடுகிறாள்?’ என்பதே வடக்கு முனையில் நின்று கொண்டிருந்தவர்களின் செவிகளில் கேட்கவில்லை. வெள்ளத்திற்கு அப்பால் மறுகரையில் தனியே அகப்பட்டுக் கொண்டதனால், பயந்து போய்க் கூச்சலிடுகிறாள் என்றே எல்லாரும் எண்ணிக் கொண்டிருந்தனர்.

மணல் மூட்டைகளும், வைக்கோற் பரணைகளும், கூடை கூடையாகக் கரடுகளும் உடைப்பில் விழுந்தன. உடைப்பு அடைப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையில் அவர்கள்