பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/606

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

604நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————

எடுத்துக் கொண்ட பிரயாசைதான் இவ்வளவும். ஆனால் அடைக்கக் கூடிய அளவை மீறிவிட்ட வெள்ளம், மணல் மூட்டைகளையும், வைக்கோற் பரணைகளையும் தன்னுடைய சமாளிக்க முடியாத வேகத்தில், இழுத்துக் கொண்டு போயிற்றே தவிர தடைப்பட்டு நிற்பதாகத் தோன்றவில்லை.

பரமசிவம் பிள்ளை உதட்டைப் பிதுக்கினார். “அடைப்பதை நிறுத்துங்கள். வேகமாக ஓடிப்போய், வடக்கு மூலையிலுள்ள வடிகால்களைத் திறந்துவிடுங்கள். தண்ணீர் இரண்டு பக்கமாகக் கழிந்து போனால் ஊருக்கும் வீடு வாசல்களுக்குமாவது சேதம் ஏற்படாமல் காப்பாற்றலாம்.”

பிள்ளையின் யோசனை மற்றவர்களுக்கும் சரியென்றே பட்டது. உடைப்பை எந்த வகையிலும் இனிமேல் அடைக்க முடியாது என்று தோன்றியதால், அந்த முயற்சியை யாவரும் கைவிட்டனர். முழுத்தண்ணீரும் உடைப்பு வழியாகவே வெளியேறுமானால், வயல் வரப்புக்கள் மட்டுமில்லாமல், கீழே பள்ளத்தாக்கிலுள்ள ஊரும் மூழ்கிவிட வேண்டியதுதான். ஊருக்கு அந்தக் கதி நேராமல் காப்பதற்குத்தான் கிராம முன்சீப் பரமசிவம் பிள்ளை வடக்கு மூலையிலுள்ள கலுங்கலின் வடிகால்களைத் திறந்துவிடும்படி சொன்னார்.

கரையில் உடைத்துக் கொண்ட இடத்தைவிட வடிகால் இருந்த இடம் தாழ்ந்த மட்டமாகையினால், வடிகாலைத் திறந்துவிட்டால் உடைப்பில் வெள்ளம் குறைந்து மட்டுப்பட்டு உடைப்பை அடைக்க வசதியாக இருக்கும்.

பரமசிவம் பிள்ளை கூறியதைக் கேட்டவுடன் அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அத்தனைபேரும், வடக்கு மூலையிலிருந்த கலுங்கலை நோக்கி ஓடினர்.

ரெவின்யூ இன்ஸ்பெக்டர், தலையாரி, வெட்டியான் இவர்கள் புடைசூழக் கிராம முன்சீப் பிள்ளை மட்டும் உடைப்பின் அருகிலேயே நின்று கொண்டிருந்தார்.

எதிரே தென் கரையிலிருந்து முன்போலவே கூச்சல் போட்டுக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்.

மணியம் பரமசிவம் பிள்ளையின் மனத்தில் என்ன தோன்றியதோ தெரியவில்லை. அவர் ரெவின்யூ இன்ஸ்பெக்டரைப் பார்த்துக் கூறினார். “இன்ஸ்பெக்டர் சார்! உடைப்பு எப்படி நிகழ்ந்தது என்பதை யாருமே பார்க்கவில்லை.அதோ எதிர்க்கரையில் தன்னந்தனியே நின்று கொண்டு, கூப்பாடு போடும் அந்த ஆட்டுக்காரப்பெண் பிள்ளையைப் பாருங்கள். உடைப்பு ஆரம்பமான போதே அவள் தென்கரையில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்திருக்க வேண்டும். பயந்து போய் அங்கேயே நின்றுவிட்டாள். உடைப்பின் காரணம் அவளுக்குத் தெரிந்திருக்கலாம்!”

“அவள் ஏதோ கூப்பாடு போடுகிறாளே? அது உங்கள் காதில் விழுகிறதா?” என்று இன்ஸ்பெக்டர் கேட்டார்.

“எப்படிங்க விழமுடியும்? தண்ணி பாயிற சத்தந்தான் காதைத் தொளைக்குதே!”

வெட்டியான் அவருக்கு முன்சீப்பின் சார்பாகச் சமாதானம் கூறினான்.