பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/607

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————————

முதல் தொகுதி / கண்மாய் உடைப்பு 605


“அந்தப் பெண் யார் மகள்? உனக்குத் தெரிகிறதாடா?”

“வீரையாக் கோனான் மகள், தங்கம் மாதிரி அசப்பிலே தெரியுதுங்க”

“போன மாதம் கல்யாணங் கட்டிக் கொடுத்தானே அந்தப் பொண்ணாடா?”

“அது மாதிரிதான் தோணுதுங்க, எசமான்!”

“ஏன் இப்படி வாய் கிழியக் கத்துது? பாவம் வெள்ளம் வடிந்தால் தானாக இக்கரைக்கு வந்திட்டுப்போவுது?. அது என்ன கூப்பாடு போடுகிறதென்றே காதில் விழவில்லையேடா?”

“மேய்ச்சலுக்குக் கொண்டு வந்த ஆடுகளில் ஏதாவது வெள்ளத்தில் விழுந்துவிட்டதோ என்னவோ?”

“அட! ஏதோ உசிரைப் பறிகொடுத்திட்டாப்பிலே இல்லே கத்தித்தொலைக்குது!”

“என்ன வேண்டுமானாலும் கத்தட்டும்! விடு... இப்போது யார் அங்கே போவது? வெள்ளம் வடிகிறவரை எதுவும் செய்ய முடியாது. வாருங்கள், நாமும் கலுங்கல் பக்கமாகப் போகலாம்.”

கிராம முன்சீப் பரமசிவம் பிள்ளை வடக்குப் பக்கமாக நடந்தார். ரெவின்யூ இன்ஸ்பெக்டரும் பின்பற்றினார். தலையாரியும் வெட்டியானும் கூட நடந்தார்கள்.

கலுங்கலில் இருந்த நாற்பத்திரண்டு வடிகால்களையும் திறந்துவிட்டார்கள்.

ரவு எட்டு எட்டரை மணி சுமாருக்கு உடைப்பில் தண்ணீர் குறைந்து, ஆள் இறங்கலாம் என்ற நிலைமை ஏற்பட்டது. காலை பத்துப் பத்தரை மணி சுமாருக்கு ஏற்பட்ட உடைப்பின் வேகம் தணிய அவ்வளவு நேரமாயிற்று. ஊர்ச் சாவடியில் ரெவின்யூ இன்ஸ்பெக்டரும் கிராம முன்சீப் பரமசிவம் பிள்ளையும் உட்கார்ந்து கொண்டிருந்தனர். கண்மாய் உடைப்பைப் பற்றி ஜில்லா கலெக்டருக்கு அனுப்பவேண்டிய ‘ரிப்போர்ட்’ விஷயமாக அவர்களுக்குள் பேச்சு நடந்துகொண்டிருந்தது.

உடைப்பின் காரணமாக, எதைக் குறிப்பிடுவது என்றுதான் இருவருக்குமே தெரியவில்லை.

தென்கரையில் நின்று கூச்சலிட்டுக்கொண்டிருந்த வீரையாக் கோனான் மகள் தங்கத்திற்குத் தெரிந்திருக்குமோ என்று பரமசிவம் பிள்ளைக்கு மனதில் ஒரு சந்தேகம் இருந்தது.

அதனால் வெட்டியானை வீரையாக் கோனான் வீட்டிற்குத் துரத்தியிருந்தார் அவர்.

ன்ஸ்பெக்டரும், பரமசிவம் பிள்ளையும் வெட்டியானை எதிர்பார்த்தே சாவடியில் காத்துக் கொண்டிருந்தார்கள். மணி ஒன்பதரைக்கும் மேல் ஆகிவிட்டது. வெட்டியான் ஏன், தாமதிக்கிறான் என்பது அவர்கள் இருவருக்கும் புரியவில்லை.