பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/608

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

606நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————


ணி பத்து ஆவதற்குக் கொஞ்ச நாழிகைக்கு முன்பே வெட்டியான் திரும்பி வந்தான். பரபரப்போடு அவன் மட்டும் தனியாக ஓடி வருவதைப் பார்த்ததுமே பிள்ளை ‘ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது’ என்று நினைத்தார். தங்கத்தை அழைத்து வரச் சொல்லியல்லவா அவனை அவர் அனுப்பியிருந்தார்? அவனோ தனியாக ஓடிவருகிறானே!...

அவனை ஆசுவாசப்படுத்தி இருவரும் விஷயத்தைக் கேட்டார்கள். கண்மாய் உடைந்ததற்குரிய காரணத்தையா அவன் சொன்னான்? ஓர் அற்புதமான கற்பனைக் கதையைக் கைதேர்ந்த கதாசிரியன் சொல்வது போலிருந்தது அவன் கூறிய விவரம். நம்பவே முடியவில்லை அவர்களால் இப்படியும் நடக்குமா? இதை ‘ரிப்போர்ட்’டில் எப்படி எழுதுவது? எழுதினால் யாராவது நம்புவார்களா? என்று திகைத்தனர் இன்ஸ்பெக்டரும் பரமசிவம் பிள்ளையும்.

அப்படி அவன் கூறிய காரணம்தான் என்ன?

வீரையாக் கோனான் தன் மகளைக் கட்டிக்கொடுத்திருந்ததும் உள்ளூரில்தான். தங்கத்தின் புருஷன் பொன்னையாவுக்கு, சொந்தத்தில் ஆடுகள் இருந்தன. அடிக்கடி ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிக்கொண்டுபோவது அவன் வழக்கம். காலையில் பொழுது புலருவதற்கு முன்பே ஆடுகளை ஒட்டிக் கொண்டு புறப்பட்டு விடுவான்.அவன். தங்கம் எட்டு எட்டரை மணி சுமாருக்கு, அவன் ஆடு மேய்க்கிற இடத்திற்குக் கஞ்சி கொண்டுபோய்க் கொடுப்பது வழக்கமாக இருந்தது.

பிரஸ்தாப சம்பவம் நடந்த அன்று காலையில் கண்மாய்க்கரைப் பக்கமாக ஆடுகளை மேய்ப்பதற்குக் கொண்டு போயிருந்தான் தங்கத்தின் புருஷன்.

வீட்டில் வீரையாக் கோனானுக்கு ஏழெட்டு நாட்களாக உடம்பு சுகமில்லை. காய்ச்சலும் இருமலுமாக வந்து, முடங்கிக் கிடந்தான். உள்ளூர் நாட்டு வைத்தியர் வந்து கையைப் பிடித்துப் பார்த்துவிட்டு, இரண்டு மூன்று வேளை கண்டங்கத்திரி வேரினால் கஷாயம் கொதிக்க வைத்துக் கொடுக்கும்படி சொல்லிவிட்டுப் போயிருந்தார்.

தங்கம் அக்கம் பக்கத்தில் கண்டங்கத்திரி வேரைத் தேடி அலைந்து பார்த்தாள். கிடைக்கவில்லை.

“ஏம்மா! இங்கே அதைத் தேடி அலையிறே? உன் புருஷனுக்குக் கஞ்சி கொண்டு போயி கொடுக்கிறப் பக்கமாகக் கரையிலே இருந்தா நாலு வேறு பிடுங்கித் தரச் சொல்லி, வாங்கிட்டுவா!” என்றான் வீரையாக் கோனான்.

தங்கம் கஞ்சிக் கலயத்தோடு கண்மாய்க் கரைக்குப் புறப்பட்டாள். கண்டங்கத்திரி வேரைக் கொண்டு வந்து கஷாயம் போடவேண்டும் என்று, வழக்கமாகப் புறப்பட்டுச் செல்லும் நேரத்திற்கு முன்பே புறப்பட்டாள். வேரை வெட்டுவதற்காக ஒரு சின்ன மண்வெட்டியையும் எடுத்துக் கொண்டு போனாள்.