பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/609

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————————

முதல் தொகுதி / கண்மாய் உடைப்பு 607


ண்மாய்க் கரையில் ஒரு மரத்தடியில் அவள் புருஷன் பொன்னையாவுக்குக் கஞ்சி ஊற்றி உண்ணச் செய்தபின், ‘கண்டங்கத்திரி வேர் வேண்டும்’ என்பதைப் பிரஸ்தாபித்திருக்கிறாள்.

“நீ இங்ங்னே குந்திக்கிட்டிரு, ஆடுக காடுகரைகளிலே நுழைஞ்சிடாமே பாத்துக்க... அந்த மம்மட்டியேக் கொடு... நான் போயி, அந்த வேரை வெட்டிக்கிட்டு வாரேன்” என்று அவளை அங்கே மரத்தடியில் இருக்கச் செய்துவிட்டு, கையில் மண் வெட்டியோடு கண்மாய்க் கரைமேல் ஏறிப் புறப்பட்டான் அவன்.

கண்மாய்க் கரையில் குறுக்கும் நெடுக்குமாகக் கண்டங்கத்திரி வேரைத் தேடி அலைந்து கொண்டிருந்தான் தங்கத்தின் புருஷன். அவன் எந்தெந்த இடங்களில் அலைந்தானோ அங்கெல்லாம் அந்த வேர் கிடைப்பதற்குரிய கண்டங்கத்திரிச் செடி படர்ந்திருக்கவில்லை. தாகத்திற்குத் தண்ணீர் பருகிவிட்டு, இன்னும் சில இடங்களில் தேடிப் பார்க்கலாம் என்ற கருத்துடன், மண்வெட்டியைக் கரையின் மேல் வைத்துவிட்டு மடையின் பக்கமாக இறங்கினான் அவன்.

தண்ணீரைப் பருகுவதற்காக மடைப் பக்கம் குனிந்தவனுடைய பார்வை, மடையோரத்தில் நிலைத்தது. அவன் முகம் மலர்ந்தது. மடையின் காரைச் சுவருக்கும், மண் கரைக்கும் நடுவே இருந்த இடுக்கில் ஓர் இரண்டு பாக நீளத்திற்குப் பரவிப் படர்ந்து வேரோடியிருந்தது கண்டங்கத்திரி.

அவ்வளவுதான்! தாகத்தையும்கூட மறந்துவிட்டு, மண்வெட்டியை எடுத்துக் கொண்டு வந்து, வேரைத் தோண்டும் முயற்சியில் இறங்கினான்.

கண்மாயில் கரை முட்ட முட்டத் தண்ணிர் அலைமோதுகிறது. மடைப் பக்கத்தின் கரையின் அகலம் ஏற்கெனவே மிகவும் குறைவு. மண்ணோ உதிர்த்து வைத்த பிட்டு மாதிரி நனைந்து போயிருந்த சிவப்புக் கரம்பை மண். மடையின் கரைச் சுவரோ, நீரில் நனைந்து நெகிழ்ந்திருந்தது. கண்டங் கத்திரிச் செடிவேரோடியிருந்த இடமோ, நல்ல மூட்டு வாய் கரையும் மடையும் பொருந்துகிற மெல்லிய வளைவு.

அந்த வளைவில் ஒரே வரிசையில் இரண்டு மூன்று நண்டுகள் பொந்து தோண்டினால்கூட ஆபத்து. அப்படிப்பட்ட இடம் அது.

அந்த முட்டாள் பொன்னையாவுக்கு அதையெல்லாம் யோசிக்க நேரம் ஏது? அவனுக்கு வேண்டிய கண்டங்கத்திரி வேர் அங்கே படர்ந்திருக்கிறது. அது போதும். சுவரில் கடப்பாறையால் ஓங்கி அறைவதுபோலப் பிரம்மாண்டமான அலைகள் கரையின் ஈரமண் மேலும், மடைச் சுவரின் மேலும் மோதி அறைந்து கொண்டிருக்கின்ற நிலையில், அவன் கையிலிருந்த மண்வெட்டி சதக் சதக்கென்று பாய்ந்தது.

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு ஐந்தாவது முறையாக அவன் மண்வெட்டியைத் தூக்கி வெட்டுவதற்காக ஓங்கியபோது புலுபுலுவென்று மண் சரிந்தது. கையிலிருந்த